சிறு நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் கொரில்லா மார்க் கெட்டிங்! – வழிகாட்டும் ஆலோசனைகள்!

செலவு குறைவு என்பதால், புதிய ஒரு விளம்பர உத்தியை உடனடியாக உங்களால் மாற்றிக்கொள்ள முடியும்.

ந்த பிசினஸாக இருந்தாலும் வாடிக்கையாளர்களை ஈர்த்து பிசினஸில் ஜெயிக்க உதவியாக இருப்பது மார்க்கெட்டிங். ஒரு பொருளை எப்படியெல்லாம் விற்பனை செய்ய வேண்டும் என்பதில் ஒவ்வொரு தொழிலதிபருக்கும் ஒரு திட்டம் இருக்கும்.

ஒரு பொருளை அறிமுகம் செய்வதிலிருந்து அதை விற்பனை செய்து, தொடர்ந்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வது வரை தொழிலை வெற்றிகரமாக நடத்த நிறைய மார்க்கெட்டிங் உத்திகளைக் கடைப்பிடித்தால்தான் அந்த பிசினஸில் வெற்றி பெற முடியும்.

சிறு நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் கொரில்லா மார்க் கெட்டிங்! - வழிகாட்டும் ஆலோசனைகள்!

புதிதாகத் தொழில் தொடங்கியவர்கள், மார்க்கெட்டிங்குக்கு நிறைய பணத்தைச் செலவழிக்க முடியாத நிலையில் இருப்பார்கள். அந்த நிலையில், அந்தச் செலவை வீண் என்றுகூட நினைப்பார்கள். ஆனால், மார்க்கெட்டிங்குக்காக நாம் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு வகையான முதலீடே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதிகம் செலவு செய்யாமல், அதே நேரத்தில் அதிக அளவிலான மக்களைச் சென்றடைய ஏதாவது ஒரு வழி இருக்கிறதா என்பது சிறிய அளவில் தொழில் செய்பவர்களின் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில்தான், கொரில்லா மார்க்கெட்டிங். கொரில்லா குரங்கு தெரியும். அது என்ன கொரில்லா மார்க்கெட்டிங், இதை பிசினஸில் எப்படிப் புகுத்தலாம் என்பது பற்றி விவரிக்கிறார் மார்க்கெட்டிங் ஆலோசகர் சக்திவேல் பன்னீர்செல்வம்.

கொரில்லா மார்க்கெட்டிங் என்றால்..!

‘‘ஒரு நிறுவனத்துக்கான மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரம் என்றவுடன் அச்சு, தொலைக்காட்சி, வானொலி, ஸ்டால்கள் வைப்பது, டிஜிட்டல் விளம்பர ஐடியாக்கள்தான் நம் எண்ணத்தில் வந்து போகும். இத்தகைய விளம்பரங்களுக்காக மணிக்கணக்கில் யோசித்து, ஆயிரக்கணக்கில் செலவழித் திருப்போம். சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்துவிட்டு, அடுத்த கட்ட விளம்பர உத்தியாக பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள் எனச் சிந்திக்கக்கூடும்.

வழக்கமான முறைகளைப் பின்பற்றாமல் வித்தியாசம்மான நடவடிக்கைகள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதைத்தான் கொரில்லா மார்க்கெட்டிங் டெக்னிக் என்கிறார்கள் மார்க்கெட்டிங்துறை சார்ந்த நிபுணர்கள். வித்தியாமான சிந்தனை மூலம் காலத்துக்கு ஏற்ப, குறைந்த செலவில் அதிகமான மக்களைச் சென்றடைவதுதான் இந்த கொரில்லா மார்க்கெட்டிங்கின் நோக்கம். உதாரணமாக, பர்கர் கிங் என்ற நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பர்கர் வாங்குபவர்களுக்கு கிரீடம் போன்ற தொப்பியைப் பரிசாக வழங்குவதை வழக்கமாகக்கொண்டிருந்தது. கொரோனாவின்போது பயம் காரணமாக வாடிக்கையாளர்கள் பர்கர் வாங்குவது குறைந்தது. இந்த நிலையில், ஒரு அடி நீளம், அகலமுள்ள பெரிய தொப்பியை தன் வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் இலவசமாகத் தர ஆரம்பித்தது. அந்த தொப்பியை அணியும்போது சமூக இடைவெளி இயல்பாகவே உருவானதால், வழக்கம்போல் வாடிக்கையாளர்களை அந்த நிறுவனத்தால் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது.

வித்தியாசமாக யோசிப்பது!

கிரியேட்டிவாக யோசிப்பதற்கும் லேட்டரல் திங்கிங்குக்கும் நிறைய மாறுபாடுகள் உண்டு. கொரில்லா மார்க்கெட்டிங் முறை என்பது லேட்டர் திங்கிங் உத்தியைக் கொண்டதாகும். உதாரணமாக, காதலர் தினக் கொண்ட்டாங்கள் என்றால், பெரும்பாலான நிறுவனங்கள் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்பது போன்ற ஒரே மாதிரியான இரு பொருள்களை வாடிக்கையாளருக்கு ஏற்றபடி ‘கஸ்டமைஸ்ட்’ஆக செய்து தருவது என நிறைய அறிவிப்பு களை வெளியிட்டு வாடிக்கை யாளர்களை ஈர்க்கும். இதன் மூலம் அவர்களின் லாபத்தின் அளவைக் குறைத்து விற்பனையை அதிகரிப்பார்கள். ஆனால், சென்னையில் உள்ள பிரபல உணவகம் ஒன்று, கடந்த காதலர் தினத்தன்று ‘சிங்கிள்களுக்காக சிக்கன் பொக்கே’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி, கொரில்லா டெக்னிக் மூலம் தன்னுடைய வாடிக்கை யாளர்களை ஈர்த்தது. இந்தச் சலுகை புதுமையாக இருந்ததுடன் லாபத்தின் அளவையும் குறைக்காமல், அதிகமான நபர்களையும் அந்த உணவகம் சென்றடைந்தது.

யாருக்கெல்லாம் பயன்படும்?

செலவு குறைவு என்பதால் ஸ்டார்ட்அப் தொடங்கி, குறைந்த முதலீட்டில் இயங்கும் நிறுவனங்களுக்கு இந்த டெக்னிக் மிகப் பொருத்தமாக இருக்கும். அதற்காக அதிக பணப்பழக்கம் கொண்டுள்ள ஒரு நிறுவனம் இந்த மார்க்கெட்டிங் உத்தியைக் கடைப்பிடிக்கக் கூடாது என்றில்லை. மார்க்கெட்டிங்குக்கான செலவைக் குறைத்து பொருளின் உற்பத்தி விலையைக் குறைக்க விரும்பும் நிறுவனங்களும் கொரில்லா மார்க்கெட்டிங் முறையை நிச்சயம் கடைப்பிடிக்கலாம்.

கொரில்லா மார்க்கெட்டிங் முறையில் வெற்றி பெற என்னென்ன வழிமுறை களைப் பின்பற்ற வேண்டும்?

1. ஐடியாக்களில் புதுமை

உங்கள் நிறுவனத்துக்கு என்று தனித்துவமான திட்டங்களை உருவாக்க வேண்டும். ஒரு பிரபல நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உத்தி உங்களை ஈர்த்திருக்கலாம். அதையே நீங்களும் கடைப்பிடித்தால் வாடிக்கையாளர்களுக்கு அது பழமையான ஒன்றாகவே இருக்கும். ஒரு நிறுவனத்தின் உத்தியை உங்கள் பிசினஸுக்கு ஏற்றது போன்றும், உங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றது போன்றும் புதுமையாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். பிசினஸில் நிதி நெருக்கடி வரும்போதும், அதிக வாடிக்கையாளர்களை இழக்கும்போதும், சூழலைச் சமாளிக்க, புதிய உத்திகளைக் கையாண்டு, வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் இங்கு ஏராளம். எனவே, உங்கள் பிசினஸில் நிதி நெருக்கடியும், வாடிக்கையாளர் இழப்பும் இருப்பது போன்ற ஒரு போலியான தோற்றத்தை உங்களுக்குளே உருவாக்கிக்கொண்டு சிந்திக்கும்போது குறைந்த பட்ஜெட்டில் நிறைய புதுமைகளைக் கொண்டு வர இயலும்.

2. டிரெண்டை அடிப்படையாகக்கொள்ளுதல்..!

சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு முறை டிரெண்டிங்காக இருக்கும். அதை உங்கள் பிசினஸுக்கு ஏற்றது போன்று எப்படி மாற்றலாம் என்று சிந்திக்கலாம். டிரெண்டில் இருக்கும் ஒரு முறையை மார்க்கெட்டிங் உத்தியாகக் கடைப்பிடிக்கும்போது அதிக வாடிக்கை யாளர்களைத் தக்கவைக்க முடியும்.

3. மாத்தி யோசிப்பது

விளம்பரம் அல்லது சந்தைப்படுத்துதல் என்றவுடன் புதிய பொருளை அறிமுகம் செய்வதையோ, புதிய திட்டங்களில் முதலீடு செய்வதையோ செய்யாமல், ஏற்கெனவே உங்களிடம் இருக்கும் பொருளை எப்படிப் புதிய ஒன்றாக மாற்றி விற்பனை செய்ய இயலும் என்று சிந்திக்க வேண்டும். உதாரணமாக, சிக்கனை சிக்கன் பொக்கேவாக மாற்றியது போன்றும், வழக்கமான பாவாடை, தாவணியை மெருகேற்றி லெஹெங்கா என்றும் விற்பனை செய்வதையும் எடுத்துக்கொள்ளலாம்.

4 மாதத்துக்கொருமுறை மறுபரிசீலனை

உங்கள் பிசினஸில் நீங்கள் நடைமுறைப்படுத்தி உள்ள கொரில்லா மார்க்கெட்டிங் முறை மூலம் எத்தனை வாடிக்கையாளர்களைப் புதிதாக பெற்றுள்ளீர்கள் என்பதை மாதம் ஒருமுறை கணக்கிடுவது நல்லது. செலவு குறைவு என்பதால், புதிய ஒரு விளம்பர உத்தியை உடனடியாக உங்களால் மாற்றிக்கொள்ள முடியும்.

5. வாடிக்கையாளர்களைப் பங்குகொள்ளச் செய்வது

உங்களுடைய மார்க்கெட்டிங் உத்தி எதுவாக இருந்தாலும், அதை வெறும் விளம்பரமாக இல்லாமல், வாடிக்கையாளர்களையும் பங்குக்கொள்ளச் செய்யும் வகையில் இருந்தால் கூடுதலான கவன ஈர்ப்பையும், பல புதிய வாடிக்கையாளர்களையும் பெற இயலும்’’ என்றார்.

இந்தப் புது டெக்னிக்கை சிறு நிறுவனங்கள் செய்து பார்க்கலாமே!

%d bloggers like this: