Advertisements

Category Archives: ஆன்மீகம்

கண்ணனைத் தரிசிக்க வெள்ளி சாளரங்கள்!

ந்திரன் சாப விமோசனம் பெறும் பொருட்டு 27 நட்சத்திரங்களுடன் சேர்ந்து கிருஷ்ணரை வழிபட்ட தலமே உடுப்பி. `உடு’ என்றால் நட்சத்திரம்; `பா’ என்றால் தலைவர். நட்சத்திரங்களின் தலைவர் சந்திரன். `உடுபா’ என்று சந்திரனைக் குறிக்கும் சொல்லே உடுப்பி என மருவி அழைக்கப்படுகிறது.

* கடலில் புயலில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த கப்பலில் கிருஷ்ண விக்கிரகம் இருப்பதைத் தமது ஞானதிருஷ்டியால் கண்ட மத்வாசாரியார், விக்கிரகத்தை மீட்டு இங்கே பிரதிஷ்டை செய்திருக் கிறார். மத்வாசாரியரால் இயற்றப்பட்ட துவாதச பாசுரம் இன்றும் இந்த ஆலயத்தில் பகவானுக்கு சேவிக்கப் படுகிறது.
* மத்வாசாரியார், தம்மால் ஏற்படுத்தப்பட்ட எட்டு மடங்களின் பீடாதிபதிகள் உடுப்பி கிருஷ்ணரை பூஜிக்கும்படி ஒரு நியதியை ஏற்படுத்தினார். ஒவ் வொரு மடத்தின் பீடாதிபதியும் தனித்தோ அல்லது இளைய பீடாதிபதியுடன் சேர்ந்தோ பூஜை செய்வர். ஒவ்வொரு மடாதிபதியும் இரண்டு வருடங் களுக்கு ஒருமுறை மாறுவார்கள். இப்படி மாறும் வைபவம் `பரியாயம்’ என்று அழைக்கப்படுகிறது.
* எட்டு மடங்களின் பெயர்கள்: பேஜாவரா, புட்டிகே, பாலிமார், அதமார், சோதே, கன்னியூர், சிறூர் மற்றும் கிருஷ்ணபுரா.
* இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்  கிருஷ்ண விக்கிரகம், ருக்மணி பிராட்டியார் வழிபட்ட சாளக்கிராமத்தால் ஆனது.
* இந்தத் தலத்தின் தீர்த்த மண்டபத்தில் அருளும் கருடபகவான், அயோத்தியிலிருந்து வாதிராஜ தீர்த்தரால் கொண்டு வரப்பட்டவர் என்கிறார்கள்.
* இங்குள்ள மாதவ புஷ்கரணிக்கு வருடத்துக்கு ஒரு முறை புனித கங்கை வருவதாகக் கூறுகின்றனர்.
* ஒன்பது வெள்ளியினால் செய்த ஜன்னல்கள் மூலமே பகவான் கிருஷ்ணரை தரிசிக்க முடியும். உடுப்பி கிருஷ்ணரின் கருவறை – கிழக்குப் பக்கக் கதவு விஜய தசமியன்று மட்டுமே திறக்கப் படுகிறது.
* கிருஷ்ணரின் 24 வகையான நிலைகள் படங்களாக இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன.
* கனகதாசர் உடுப்பிக்கு வந்தபோது, அவருக்குக் கோயிலுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மனமுருகி கிருஷ்ணரை வேண்டினார்.
* அவருக்கு அருள்புரிய விரும்பிய ஸ்ரீகிருஷ்ணர், கருவறையின் பின்புறம் துளையை உண்டாக்கி, அந்தத் துளையின் பக்கம் தான் திரும்பி புன்னகை யுடன் நின்று கனகதாசர் வழிபட்டு மகிழும்படி செய்தார். இந்தத்துளையே `கனகனகிண்டி’ என அழைக்கப்படுகிறது.
* உடுப்பியில் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படும் திருவிழாக்கள்: ரத ஸப்தமி, மாத்வ நவமி, ஹனுமத் ஜெயந்தி, ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி, நவராத்திரி மஹோத்சவம்,  மாத்வ ஜயந்தி (விஜய தசமி), நரக சதுர்த்தசி, தீபாவளி, கீதா ஜயந்தி.
* ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி தினத்தன்று ஆண்கள் புலி வேடம் அணிந்துகொண்டு ஊர் முழுவதும் நடமாடிக்கொண்டுவருவது மகிழ்வான நிகழ்வாகும்.
* இந்தத் தலத்தில் ரத யாத்திரையின்போது மூன்று தேர்கள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த வைபவத்தின்போது பக்தர்கள் பசு தானம், துலாபாரக் காணிக்கை தந்து பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
* முப்பது வருடங்களுக்கு முன்பு ரம்ஜான் பண்டிகையின்போது மூன்றாவது பரியாய சுவாமி களால் நடத்தப்பட்ட இந்து முஸ்லிம் சம்மேளன், தற்போதுள்ள ஐந்தாவது பரியாய ஸ்ரீவிஷ்வேச தீர்த்த சுவாமிகளால் நடத்தப்பட்டது.
* இந்த சம்மேளன், மக்கள் சாதி மத வேறுபாடின்றி ஒற்றுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும், அமைதி யாக வாழவும் உடுப்பி   ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் நடத்தப்படுவதாகும்.

Advertisements

சர்ப்ப தோஷம் போக்கும் காளஹஸ்தீஸ்வரர்

ன்மிகத்தின் அடித்தளமே   நம்பிக்கையில்தான் அமைந்திருக்கிறது. நம்பிக்கை இல்லாமல் நாம் எத்தனை கோயில்களுக்குச் சென்று வழிபட்டாலும், அதனால் ஒரு பலனும் கிடைக்காது என்பது தான் உண்மை.
நம் நாட்டில் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கு, உரிய தீர்வு தரும் பரிகாரக் கோயிலாகத் திகழ்கிறது. ஆனால், போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லாத முற்காலத்தில், வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லாத மக்கள், அத்தகைய கோயில்களுக்கு நேரில் சென்று வழிபடுவதற்கு நிறைய சிரமங்கள் இருந்தன. இந்தக் குறையை நீக்கும் பொருட்டு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே கோயில்கள் ஏற்படுத்தி, பிரசித்தி பெற்ற தலங்களில் அருளும் இறைவனின் பெயரில் தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட வகை செய்தனர் மன்னர் பெருமக்கள்.

அத்தகைய ஆலயங்களுள் ஒன்றுதான் இதோ இப்போது நாம், ‘ஆலயம் தேடுவோம்’ பகுதிக்காக தரிசித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை  சமேத காளஹத்தீஸ்வரர் திருக்கோயில்.
திருவாரூர் மாவட்டம் செம்பியவேளூர் எனும் தலத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் காசிக்கும் காளஹஸ்திக்கும் நிகரான தலமாகப் போற்றப் படுகிறது. காளஹஸ்தியில் அருளும் காளத்திநாதரே இந்தத் தலத்தில் காளஹஸ்தீஸ்வரராக அருள்புரிகின்றார். அதேபோல், காசியின் கங்கைக் கரையில் `அரிச்சந்திரா காட்’ இருக்கிறதென்றால், செம்பியவேளூர் அரிச்சந்திரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில்.
ஒருகாலத்தில் பிரசித்திப் பெற்றுத் திகழ்ந்த ஐயனின் திருக்கோயில் தற்போது  சிதிலம் அடைந்து கிடக்கும் நிலையைப் பார்த்தபோது, ‘வினைப் பயன் அகற்றி விதிநலம் சேர்க்கும் ஐயனின் திருக்கோயிலுக்கா இந்த நிலை?’ என்று நெஞ்சம் பதறித் துடித்தது.  அதேநேரம் தற்போது ஆலயத்துக்கான திருப்பணிகள் மேற்கொண்டிருப் பதைக் கண்டபோது நமக்குச் சற்றே ஆறுதல் ஏற்பட்டது. திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அன்பர் முருகானந்தத்தைச் சந்தித்தோம்.

‘`இந்தக் கோயிலுக்குப் பிற்காலச் சோழர்களின் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றிய குறிப்புகள் தஞ்சை பெரியகோயில் மற்றும் திருத்துறைப்பூண்டி கோயிலில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு பிரசித்திப் பெற்றிருந்த இந்தக் கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டது. பிறகு 1945-ம் வருடம் நிலக்கிழார் அழகுசாமி முதலியார் குடும்பத்தினர் சின்ன அளவில் கோயில் கட்டி பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்தனர்.

பல வருடங்களுக்குப் பிறகு சரியான பராமரிப்பு இல்லாமல் போனதுடன், ஓர் அரசமரம் வளர்ந்து கருவறை முழுவதும் சிதிலமடைந்துவிட்டது. போன வருடம் கும்பகோணம் `ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்’ திருவடிக்குடில் சுவாமிகள் அடியார்களுடன் வந்து கோயிலைப் பார்வையிட்டு, உழவாரப் பணிகள் செய்ததுடன், அவர்களுடைய தொடர்ந்த முயற்சியால் கடந்த நவம்பர் மாதம் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் தொடங்கப்பட்டது. அதற்காக கும்பகோணம் கூட்டுறவு வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட்டும் தொடங்கி இருக்கிறோம்.  விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பதுதான் ஊர்மக்களின் விருப்பம்’’ என்றார்.
திருப்பணிகளுக்குத் தூண்டுதலாக இருந்த திருவடிக்குடில் சுவாமிகளைச் சந்தித்துக் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேட்டோம்.

‘‘சர்ப்ப தோஷம் இருப்பவர்கள்,  காளஹஸ்திக்குச் சென்று வழிபட்டால்  தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அதேபோல் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை அமைவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். மேலும், அரிச்சந்திரா நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் உள்ள பைரவரும் மிகுந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். அஷ்டமி தினங்களில் இங்கு நடைபெறும் சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டால், வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்களும், பூமி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் விலகிவிடுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்’’ என்று கூறினார்.
காசிக்கும் காளஹஸ்திக்கும் நிகரானதாகப் போற்றப்பெறும் செம்பியவேளூர் காளஹஸ்தீஸ் வரர் கோயிலின் திருப்பணிகள் விரைவிலேயே நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். பொலிவுற எழும்பும் ஆலயத்தில் எழுந்தருளி, நித்திய பூஜைகளை ஏற்று நமக்கு நல்வாழ்வும் வரமும் அருள காத்திருக்கிறார் காளஹஸ்தீஸ்வரர்.
அவரின் பேரருளால் உலகம் உய்வடையும் பொருட்டு, திருக்கோயில் திருப்பணிகள் தொய்வின்றி நடைபெற நாமும் நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம்.
நிதியோ, உடலுழைப்போ, பொருளோ… நமது அந்தச் சமர்ப்பணம், ‘விண்ணினார் பணி வீரனும், திருமுடியில் வெண்மதியை மாலையாக அணிந்தவனும், காளத்தியில் உறை’பவனுமாகிய ஐயனின் பேரருள் பெருங்கருணைத் திறம் நம்மையும் நம் சந்ததியரையும் வாழ்வாங்கு வாழ்விக்கச் செய்யும் என்பது உறுதி.  


வங்கிக் கணக்கு விவரம்:
The kumbakonam  Central Co-operative Bank,
Thiruthuraipoondi Branch,
A/c NO: 708037266, IFSC NO: TNSC 0010400
தொடர்புக்கு: திரு.பிரகதீசன் – 99407 84719
         திரு.முருகானந்தம் – 9786156465

சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம்

ருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம்; பாலதேவராய ஸ்வாமிகள் அருளிய கந்தசஷ்டிக் கவசம் போன்று முருகப்பெருமானைப் போற்றும் துதிப்பாடல்களில் ஸ்ரீபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவமும் ஒன்று.

பாம்பன் சுவாமிகள் அருளிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை ஆறு மண்டலங்களாகப் பகுத்து வைத்திருக்கிறார்கள் சான்றோர்கள். அவற்றில் ஆறாவது மண்டலத்தில் அமைந்திருக்கிறது ‘குமாரஸ்தவம்’ எனும் மிக அற்புதமான இந்தத் துதிப்பாடல். முருக வழிபாட்டில், முதலில் இந்தப் பதிகத்தைப் பாடிவிட்டு பின்னர் ஆராதனையைத் தொடங்குவது வெகுவிசேஷம்.

இந்தத் துதிப்பாடல் இருக்கும் இல்லத்தில் சகல சுபிட்சங்களும் தானே வந்து சேரும். வறுமையும் பிணிகளும் நீங்கும். மேலும், பில்லி சூன்யம் முதலான தீவினைகளும் தீய சக்திகளும் அந்த இல்லத்தை நெருங்கவே முடியாமல் விலகி ஓடும் என்பது அனுபவத்தில் கண்டுணர்ந்த பெரியோர்களது அறிவுறுத்தல்.

எப்படிப் பாடுவது, எப்படி வழிபடுவது?

அனுதினமும் இந்தப் பாடலைப் பாடி முருகப்பெருமானை வழிபடுவதால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இதைப் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள், ஒரு வேளையாவது இந்தப் பாடலைப் பாடி பூஜிக்கலாம்.

தினமும் காலையில் எழுந்து நீராடி, சமயச் சின்னங்கள் தரித்து, பூஜையறையில் முருகப்பெருமான் திருமுன் நெய் தீபம் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம். செவ்வரளி, செம்பருத்தி முதலான சிவப்பு வண்ண மலர்களை பயன்படுத்துவது விசேஷம் என்றாலும், அவை கிடைக்காதபட்சத்தில் மற்ற வாசனை மலர்களையும் அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம். முருகனின் மகிமையைச் சொல்லும் இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றையும் சொல்லி பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். பாடல் முடிந்ததும் நிறைவாக நைவேத்தியம் சமர்ப்பணம் செய்து, தூப-தீபம் காட்டி ஆராதித்து வணங்க வேண்டும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், குரு பலம் இல்லாதவர்கள், இன்னும் பிற தோஷங்களால் வருந்துவோர், அனுதினமும் குமாரஸ்தவத்தைப் பாராயணம் செய்து குமரன் அருளால் வாழ்வும் வரமும் பெற்று மகிழுங்கள்.

இங்கே, நீங்கள் அர்ச்சித்து வழிபடுவதற்கு வசதியாக முழுப் பாடலும் முதலில் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து… பாடல் வரிகளின் விளக்கத்தை, மகிமையை நீங்கள் அறிந்து உணர்ந்து வழிபடும் விதம் ஒவ்வொரு வரியும் உரிய விளக்கத்துடன் இடம்பெற்றுள்ளது.

Continue reading →

வடக்கு திசையில் ஏன் தலைவைத்துப் படுக்கக் கூடாது?

வடக்கு திசை என்பது வழிபாட்டுக்கு உரிய திசையாகச் சொல்லப்படுகிறது. குரு உபதேசம் பெறுவதற்கும் வடக்கு திசையே உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால்தான் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி அமைந்திருக்க, வடக்கு நோக்கி அமர்ந்தபடி சனகாதி முனிவர்கள் உபதேசம் பெறுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை வடக்கு மிகவும் முக்கியமானதாகப் போற்றப்படுகிறது. பரம்பொருளான ஈசன் உறையும் திருக்கயிலாயம் வடக்கு புறமாகத்தான் அமைந்திருக்கிறது. இவை போன்ற காரணங்களால் வடக்கு திசை என்பது வழிபாட்டுக்கு உரிய திசையாக நம் முன்னோர்களால் சொல்லப் பட்டிருக்கிறது.

Continue reading →

பிள்ளை வரம் தரும் வளையல் பிரசாதம்!

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மன் ஆலயத்தில், ஆடிப் பூரம் விழாவின் 4-ம் நாளன்று, அம்பாளுக்கு வளைகாப்பு நடைபெறும். இந்த வைபவத்தின்போது, ஊறவைத்த பயறு வகைகளை, அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வர். பார்ப்பதற்குக் கர்ப்பிணி போலவே காட்சி தருவாள் காந்திமதி அம்மன். விழாவுக்கு வந்தவர்களுக்கு வளையல் பிரசாதம் தரப்படும். இந்த வளையலை அணியும் புதுமணப் பெண்ணுக்கு அடுத்த பூரத்துக்குள் வளைகாப்பு வைபவம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்த வைபவத்தைக் காணும் கன்னிகளுக்கு விரைவில் திருமணம் கைகூடுமாம்!

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை –23.07.2017

ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும்  சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள்  சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

Continue reading →

ரமண மகரிஷி சொன்ன வாழ்க்கைக்கு அவசியமான உபதேசங்கள்!!

அடியார்களால், மகான் இரமணர், ரமண மகரிஷி மற்றும் பகவான் ரமணர் என அழைக்கப்படும் கருணைக்கடல், அருள் வள்ளல், மகான் இரமணர் அவர்களின் அருள் நிலை, மாபெரும் ஞானக்கடல் ஆகும்.

இளைய வயதில், பெரிய புராணம் உள்ளிட்ட இறை நெறி நூல்களை வாசித்து, மதுரை மீனாட்சி அன்னையை தினமும் தரிசிக்கும் பாக்கியம் பெற்று, இறைவனிடத்தும் அடியாரிடத்தும் மாறாத பற்று கொண்டு, அதுவே பின்னர் திருவண்ணாமலையில் இருக்கும் உறவினர் மூலமாக அருணாச்சல நாயகன் அடி தொழ பேரவாக் கொண்டு, இடையில் நிகழ்ந்த உறவின் மரணத்தில் “நான் யார்?” இங்கே உடல் தான் இறந்திருக்கிறது, உயிர் எங்கே? எனும் ஆத்மா விசாரத்தில் திளைத்து, உடனே, சுற்றத்தை விடுத்து கிளம்பினார்.

Continue reading →

கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!

ல்லறமல்லது நல்லறமன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. மனிதராகப் பிறந்த ஒவ்வோர் ஆணும் பெண்ணும் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து, விதிக்கப்பட்ட தர்மங்களை அனுஷ்டித்து வாழ வேண்டும். அதுதான் பிறவிப்பயனும் ஆகும்.   

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. திருமணம் மட்டுமல்ல… நாம் பிறப்பது, வாழ்வது எல்லாமே முன்னரே எழுதப்பட்ட விதி ஆகும். நம்மைத் தோற்றுவிப்பதும், நம்மை வழிநடத்திச் செல்வதும், நாம் அடைய வேண்டியவற்றை அடையச்செய்வதும் நமது விதியே.

Continue reading →

நல்லெண்ணம் நல்லதையே செய்யும்!

நல்லவர்களின் வார்த்தைக்கு தெய்வமே செவிசாய்க்கும் என்பதற்கு உதாரணமான கதை இது:
வட மதுரையில், அரிவியாசர் எனும் பக்தர் வாழ்ந்து வந்தார். அன்பையும், அகிம்சையையும் போதிக்கும் அவரின் மனமும், நாவும் எப்போதும் நாராயண நாமத்தையே உச்சரிக்கும்.
ஒரு சமயம், அரிவியாசருக்கு, பூரி ஜகந்நாதம் சென்று, பகவானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அதன்படி, வட மதுரையிலிருந்து, ஜகந்நாதம் புறப்பட்டார்.
வழியில், ஒரு அழகான சோலை தென்பட, அதன், நடுவில், காளி கோவில் இருந்தது. நடந்த களைப்பு தீர, கோவில் மண்டபத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தவர், பின், அப்படியே, நாராயணனை உள்ளத்தில் தியானித்தபடி, பக்தியில் ஆழ்ந்து விட்டார். திடீரென, ஏதோ ஒரு ஓசை கேட்க, திடுக்கிட்டு, திரும்பி பார்த்தார்.
அங்கே, ஒருவர், ஆட்டை, ‘தரதர’ வென இழுத்து வந்து, காளி கோவிலில் பலி கொடுத்தார். ஆடு, துடிதுடித்து இறந்தது. இதைப் பார்த்த அரிவியாசருக்கு, உடலும், உள்ளமும் பதை பதைத்தது.
‘அமைதியும், அழகும் நிறைந்த இடத்தில் ஆபத்து இருக்கும் என்பர்; அதற்கேற்றாற் போல், இனிமையான இந்த இடத்தில், இவ்வளவு கொடுமையா… இனிமேல் இங்கிருக்க கூடாது…’ என்று எண்ணி, அங்கிருந்து புறப்பட்டார், அரிவியாசர்.
அப்போது, விக்கிரகத்திலிருந்து வெளிப்பட்ட காளி, ‘அரிவியாசா… என் ஆலயத்தில் வந்து தங்கியிருந்த நீ, பசியோடு செல்வதா… வா, நான் உனக்கு உணவிடுகிறேன்; பசியாறி போ…’ என்றாள்.
‘தாயே… கருணை பெருக்கெடுத்து ஓடும் உன் சன்னிதியில், உதிர வெள்ளம் ஓடலாமா… அதை, நீ ஏற்கலாமா… இன்று முதல், நீ உயிர்ப்பலி விரும்பாதிருந்தால், நீ அளிக்கும் உணவை நான் ஏற்கிறேன்; இல்லையேல், பசியோடு போகிறேன்…’ என்றார், அரிவியாசர்.
உத்தம பக்தனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, ‘அரிவியாசா… உன் விருப்பம் நிறைவேறும்; இனி, நான் உயிர் பலி ஏற்க மாட்டேன்; வந்து பசியாறிச் செல்…’ என்றார், காளிதேவி.
அத்துடன், அந்நாட்டு அரசர் கனவில் காட்சியளித்து, ‘மன்னா… இன்று முதல், என் சன்னிதியில் உயிர்க்கொலை கூடாது…’ எனக் கூறி, எச்சரித்தாள். அதன்படியே, மன்னரும் பறையறிவித்து, காளியின் கட்டளையை தெரியப்படுத்தி, உயிர் பலியைத் தடுத்தார். மேலும், அரிவியாசரிடம் வந்து, அவரை வணங்கி, நல்லருள் பெற்றார்; பின், ஜகந்நாதம் சென்று, பகவானை தரிசித்தார், அரிவியாசர்.
தன் சொற்படி, தெய்வங்களையே செயல்பட வைத்த, அருளாளர்கள் நிறைந்த பூமி இது!

குருவே சரணம்!- ஸ்ரீஅன்னை

தூசு தும்பின்றி, மாசு மறுவுமின்றி புதுவையின் கடற்கரையை ஒட்டியுள்ள அந்த சிமென்ட் சாலைக்குள் நுழையும்போதே அமைதியின் ஆளுமைக்குள் நாம் ஈர்க்கப்படுகிறோம்.  பிரெஞ்சுக் கட்டடப் பாணியில் எழில் கொஞ்ச நம்மை வரவேற்கிறது ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம். அதன் நுழைவாயிலில் தொடங்கி வரிசையாக நிற்கும் ஆசிரமத்துவாசிகள், நட்பான பார்வை வீசி நம்மைத் தலையசைத்து வரவேற்கிறார்கள்.   

உள்ளே, அடர்ந்த மரத்தில் பறவைகள் சிறகடிக்கும் ஓசை மட்டுமே கேட்கும் அளவுக்கு அமைதி. மஞ்சள், சிவப்பு, ஊதா, வெள்ளை என விதவிதமான நிறங்களில் பூக்கும் மலர்ச்செடிகள். அவற்றினூடே சில அடிகள் நடந்து திரும்பினால், ஆசிரமத்தின் திறந்த வளாகத்தில் நடுநாயகமாக எத்தனையோ லட்சம் பக்தர்களின் இதயத்தைச் சாந்தப்படுத்தி வரும் சமாதி. அப்போது தான் பூத்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தச் சமாதியைச் சுற்றிலும் கண்மூடிய நிலையில் பக்தர்கள்.

வெண்ணிறப் பளிங்குக் கற்களால் அமைந்த அந்தச் சமாதியின் உள்ளே தனித்தனிப் பிரிவுகளில் ஸ்ரீஅரவிந்தரும், ஸ்ரீஅன்னையும் சமாதி நிலை எய்தியுள்ளார்கள்.
நிமிடக்கணக்கில்… ஏன்… மணிக்கணக்கில்கூட அந்தச் சமாதியின் முன் மோனத்தவம் இருந்து அருள் வேண்டும் பக்தர்கள், மெள்ளக் கண் திறந்து, எழுந்து வந்து அந்தச் சமாதியை நெருங்கி முழந்தாளிட்டு அமருகிறார்கள். அதன் பளிங்கு மேற்பரப்பின் மீது தங்கள் நெற்றி படிய குனிந்து பிரார்த்தனையை வைக்கிறார்கள். அன்னையின் அருள் அலைகள் அங்கே நிரந்தரமாகப் பரவியுள்ளது என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த அதிர்வலையில் தங்கள் கவலைகளைக் கரைத்துக்கொண்டு நிமிர்ந்து புறப்படும்போது… உலகையே வென்று விட்ட ஒரு திருப்தியை அந்தப் பக்தர்களின் முகங்களில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
ஸ்ரீஅன்னை அவதரித்தது, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில். வங்கி அதிபர் எமோரீஸ் அல்பாஸாவின் இரண்டாவது குழந்தை அவர். 1878-ம் ஆண்டு, பிப்ரவரி இருபத்தோராம் தேதி பிறந்த அவருக்கு, மீரா அல்பாஸா என்று பெயர் சூட்டினர் பெற்றோர்.
தந்தை துருக்கி நாட்டவர். தாய் எகிப்தைச் சேர்ந்தவர். மீரா அல்பாஸா பிறப்பதற்கு ஒரு வருடம் முன்பாகத்தான் அவர்கள் பிரான்ஸுக்குக் குடிபெயர்ந்து வந்திருந்தார்கள். ‘மீரா’ என்ற பெயருக்கு இந்தியச் சாயல் உண்டு என்பது அப்போது அந்தத் தம்பதிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், இணையில்லாத கிருஷ்ண பக்தையின் பெயரைக் குறிக்கும் அந்தப் பெயரை அவர்கள் சூட்டியது ஆச்சர்யம் தரும் விஷயம்!
மீரா அசாதாரணமான குழந்தை என்பது நான்கு வயதிலேயே தெரிந்துவிட்டது. சிந்திக்கத் தோன்றாத அந்த வயதில், குழந்தைகளுக்குக் கேளிக்கைகளில்தான் அதிக நாட்டம் இருக்கும். ஆனால், மீரா ஒரு சின்னஞ்சிறு நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்துகொண்டு தியானத்தில் ஆழ்ந்துவிடுவாள். மனம் களிக்க விளையாடு வதைவிட, மௌனம்தான் அந்தக் குழந்தையைப் பெரிதும் கவர்ந்தது.   
மீராவின் அம்மாவுக்கு இது ஆச்சர்யம் தந்தது. ‘‘என்னடி பெண்ணே! உன் முகத்தைப் பார்த்தால், இந்த உலகத்தையே தோளில் தாங்குகிற தேவதை மாதிரி அல்லவா இருக்கிறது?’’ என்று அம்மா கேட்பாள். அப்போதெல்லாம் ‘‘ஆமாம் அம்மா. நான்தான் தாங்குகிறேன்’’ என்பாளாம் அந்தச் சிறுமி.
பள்ளிக்கூடத்திலும் தன் கம்பீரத்தாலும், புத்திக் கூர்மையாலும் எல்லோரையும் ஈர்த்தாள் மீரா. சக மாணவிகள் அவளை ‘அரசகுமாரி’ என்றே கூப்பிட்டனர். ஏழாம் வயதில், அந்த அரச குமாரி அசாதாரணமானவள் என்பதைப் பள்ளியில் எல்லோரும் உணர்ந்தனர். 

பதின்மூன்று வயதுப் பையன் ஒருவன், எல்லா மாணவிகளிடமும் வம்பு செய்து வந்தான். மீராவிடமும் ஒருநாள் அவன் வம்புக்கு வந்தான். மீரா சாந்தமாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் அவனை எச்சரித் தாள். அவன் கேட்பதாக இல்லை. கேலியும் கிண்டலும் தொடர்ந்தது.
ஒருநாள் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது. உருவத்தில் சிறிய, வயதில் இளைய, மிக மென்மையான அந்தச் சிறுமி… அந்தப் பெரிய பையனை அப்படியே அலாக்காகத் தூக்கி, அந்தரத்தில் ஒரு சுழற்று சுழற்றி அநாயாசமாகத் தொலைவில் வீசி எறிந்தாள்.
விழுந்து எழுந்தவன் கண்களில் ஏகத்துக்கும் மிரட்சி. நடுக்கமும் அவமானமும் விரட்ட ஓடியவன்தான்… அதற்குப் பிறகு அவன் எந்தப் பெண்ணிடமும் வாலாட்டவில்லை.
மீராவின் குழந்தைப் பருவத்துக் கனவுகளில் இனிப்புகளுக்கோ, பொம்மைகளுக்கோ இடமில்லை. தனக்கு  அடிக்கடி  வரும் ஒரு கனவு பற்றி ஸ்ரீஅன்னையே பிற்காலத்தில் இப்படி விவரிக்கிறார்…
‘‘எனக்குச் சுமார் பதின்மூன்று வயதாக இருந்தபோது ஏறக்குறைய ஓர் ஆண்டு காலத்துக்கு ஒவ்வொரு நாளும் இரவில் நடந்த நிகழ்ச்சி இது. படுக்கையில் படுத்துக் கண் மூடிய பிறகு, நான் உடலைவிட்டு வெளியே வருவேன். நகரத்தின் மையத்திலிருந்து நான் மேலே மேலே புறப்பட்டுப் போவது போலிருக்கும். தங்க மயமான உடை உடுத்தி இருப்பேன். நான் மேலே போகப்போக அந்த உடையும் பெரிதாகிக் கொண்டே போய், கடைசியில் நகரத்தின் மீது முழுமையாக ஒரு தங்கக் குடையாக அது கவிந்து கொள்ளும்.   

அதன்பிறகு நாலா பக்கங்களில் இருந்தும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், வயோதிகர்களும், நோயாளிகளும், துயருறுவோ ரும் தங்கள் உடல்களை விட்டு என் முன்னே வந்து நிற்பார்கள். தங்கள் துக்கங்களையும், துயரங்களையும் என்னிடம் கூறி உதவி கோரு வார்கள். எனது தங்க அங்கியைத் தொட்டதும் ஆறுதல் பெறுவார்கள். அதிக மகிழ்ச்சியுடனும், அதிக வலுவுடனும் தங்கள் உடல்களுக்கு மறுபடியும் திரும்புவார்கள். இந்த அற்புத அனுபவத்துக்காகவே நான் இரவுகளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன். பகல் வேளைகள் எனக்குச் சுவையற்றதாகத் தோன்றின!’’
அன்னையின் வரலாற்று நூல்கள் கூறும் இன்னுமோர் ஆச்சர்யம்…