Category Archives: விவேகானந்தர்

புதிய இந்தியாவை உருவாக்குங்கள்


உண்மை, அன்பு, நேர்மை ஆகியவற்றை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. நீ நேர்மை உள்ளவனாக இருக்கிறாயா? உயிருக்கே ஆபத்து வந்தாலும் சுயநலமில்லாதவனாக இருக்கிறாயா? அன்பு செலுத்துபவனாக இருக்கிறாயா? அப்படியானால் மரணத்துக்கும் நீ அஞ்ச வேண்டியதில்லை.

பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியை பெற்றிருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா அந்த விளக்கை பெற்றிருக்கவில்லை. போலித் தன்மையினாலும் அந்த விளக்கை பெற்றிருக்கவில்லை. ஆனால், உண்மையான மதத்தின் தலை சிறந்த சமய போதனையாகவும், மிகவும் உயர்ந்த ஆன்மிக உண்மையாகவும் அந்த விளக்கை இந்தியா பெற்றிருக்கிறது. ஆகையால்தான் பலவிதமான இன்ப துன்பங்களிலிருந்தும் இன்று வரையிலும் கடவுள் இந்தியாவை பாதுகாத்து வைத்திருக்கிறார்.

நீங்கள் மகத்தான பணியை செய்ய பிறந்தவர்கள்தான் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய் குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று வேலை செய்யுங்கள்.

மிருக பலத்தால் அல்லாமல், ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப் போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும். கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும். தாழ்த்தப்பட்டவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழட்டும்.

புல்லைத் தின்னும் மிருகங்கள்


பக்தி என்பது தூய்மையை அடிப்படையாக கொண்டே எழுகிறது. புறத்தூய்மையை எளிதாக மாற்றிவிடலாம். ஆனால், அதைக் காட்டிலும் மேன்மையான அகத்தூய்மையை மாற்ற முடியாது. அகத்தூய்மையே பக்திக்கு ஆதாரமாக அமைகிறது. உண்மை, தயவு, அகிம்சை, அன்பு ஆகிய குணங்களைக் கொண்டும், பிறரது பொருளை விரும்பாமலும், வீண் எண்ணங்கள் இல்லாமலும், பிறரால் ஏற்படும் இன்னல்களைக் குறித்து வருந்தாமலும் இருந்தால் அகத்தூய்மை யை அடையலாம்.

எண்ணம், சொல், செயல் இவற்றால் பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருக்க வேண்டும். புலால் உண்ணாமல் இருப்பதால் மட்டும், யாரும் தூயவர்களாகி விடமுடியாது. கணவனை இழந்த பெண் அல்லது ஆதரவற்றவர்களை ஏமாற்றுபவனும், பொருளுக்காக எத்தகைய கொடுமைகளையும் செய்பவனும், புல்லை மட்டுமே உண்பவனாக இருந்தாலும் அவன் மிருகமே ஆவான். எவருக்கும் தீங்கு நினைக்காமல் பகைவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன், பன்றி மாமிசம் சாப்பிடுபவனாக இருந்தாலும் அவனே பரமயோகியாவான்.

பக்தியை கடைபிடிப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியுள்ள மனம்தான் முயற்சி செய்யும் ஆற்றல் பெற்றிருக்கும். எத்தகைய இடர்களையும் விலக்கிக் கொண்டு முன்னேற, அதனால் தான் முடியும். அதே நேரம், அளவுக்கு மீறிய மகிழ்ச்சி கூடாது. அது, நமது ஆழமான சிந்திக்கும் ஆற்றலைக் குலைத்து விடும்.


மரணத்தை வென்றவர் யார்?
* மனதை தூய்மைப்படுத்துவதே மனிதனின் முதல் கடமை. மனதை தூய்மைப்படுத்த மலைக்குகைகளிலும், வனங்களிலும், புண்ணியக்ஷத்திரங்களிலும் அலைந்து திரிந்து பயனில்லை.
* மனம் என்னும் கண்ணாடியை மனிதன் தூய்மையாக்கிய பிறகு, அவன் எங்கு வசிக்கிறான் என்ற பேச்சுக்கே இடமில்லை. தூய்மையான உள்ளத்தில் கடவுளாகிய மெய்ப்பொருள் உள்ளபடி ஒளிர்கிறார்.
* வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை மனிதன் விட்டொழிக்க வேண்டும். வெவ்வேறு இடங்களுக்கு ஓடுவதால் தனது வலிமையை மனிதன் வீணே இழக்கிறான்.
* மனிதன் தன் மனதை தூய்மையாக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். ஒருவன் எந்த இடத்தில் இருக்கிறானோ அங்கிருந்தே இதனைச் செய்ய முடியும். வேண்டியது மன வைராக்கியம் மட்டுமே.
* இதயத்தில் எப்போது வீணான ஆசைகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றதோ, அப்போதே மனிதன் மரணத்தை வென்றவன் ஆகிறான். அவன் இவ்வுடலில் இருக்கும்போதே கடவுளை அறியும் தன்மை பெறுகிறான்.
* உலகத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருந்தாதே. உன் உள்ளத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருத்தம் கொள். உன் உள்ளத்தை ஒழுங்குபடுத்து. பிறகு உள்ளும் புறமும் தூய்மை பெறுவதை விரைவில் உன்னால் உணரமுடியும்.
-விவேகானந்தர்