Advertisements

Category Archives: ஆன்மீகம்

மகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம்: தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும், உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசையும் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனிடையே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் தொடங்கிவிட்டது. செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை மகாளய பட்ச காலமாகும். மகாளய பட்சம் புரட்டாசி அமாவாசையன்று முடிவடையும். அதற்கு முந்திய பதினைந்து நாட்களும் மகாளய பட்ச காலமாகும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும்.

Continue reading →

Advertisements

கடல் வண்ணனே கண்ணா!

கடல் வண்ணனே கண்ணா!
கடல் வண்ணனே கண்ணா!

திருமாலைப் போற்றும் பாடல்களைச் சிந்தித்தால், சட்டென்று நம் நினைவுக்கு வருவன ஆழ்வார்களின் பாசுரங்களே. ஆழ்வார்களின் காலத்துக்கும் முன்பாக அந்த மாலவனைப் போற்றிப் பாடிய பைந்தமிழ் பாக்கள் சில உண்டு. அவற்றை இன்னதென்று சொல்லாமல் பிறர் பாடக் கேட்டால், `திவ்யப் பிரபந்தப் பாடல்’ என்றே எண்ணத் தோன்றும். அத்தகைய மொழிச் சிறப்பினையும் பொருள் சிறப்பினையும் பெற்றவை அவை. அவற்றில் குறிப்பிடத் தக்கது சிலப்பதிகாரத்தில் காணப்படும் `ஆய்ச்சியர் குரவை’ பகுதி.

கடல் வண்ணனே கண்ணா!

கோவலனும் கண்ணகியும் மறுவாழ்வுதேடி மதுரையை நோக்கிவருகிறார்கள். மதுரைக்கு வெளியே இடையர்கள் வாழும் இடம். மாலவனின் பக்தர்களான அவர்கள் எப்போதும் அந்த மாயக் கண்ணனின் மீதே தங்களின் கவனத்தை வைத்ததனால் மாமதுரை அவர்களை ஈர்க்கவேயில்லை போலும். அவர்களிடத்தில் – ஆய்ச்சியரிடம்தான் கண்ணகியை ஒப்படைத்துவிட்டு மதுரை விரித்திருந்த மீளவியலாத மாயவலைக்குள் புகுந்தான், கோவலன் என்கிறது சிலப்பதிகாரம்.

கோவலன் சென்று வெகுநேரமாயிற்று. துர்ச் சகுனங்கள் தோன்றின. ஆய்ச்சியர்களின் மனமோ நிலைகொள்ளவில்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை. ஆகவே, ஆய்ச்சியர் அனைவரும் ஒன்றுகூடி திருமாலின் திருநாமத்தையும் அவனின் திருவிளையாடல்களையும் சொல்லித் துதிக்க ஆரம்பிக்கின்றனர். அதுவே ஆய்ச்சியர் குரவை. கண்ணனின் பெருமைகளைப் பாடும் அற்புதமான ஆய்ச்சியர் குரவையின் பாடல்கள் சில இங்கே உங்களுக்காக!

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்

கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே

கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை

மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

கடல் வண்ணனே கண்ணா!

கருத்து : தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைய விரும்பினர். மலையை மத்தாக்கலாம்; பாம்பைக் கயிறாக்கிவிடலாம். ஆனால், எல்லா உயிர்களின் முயற்சிக்கும் ஆதாரம் அந்த நாரணன் அல்லவா. அவனைப் பணிந்து வேண்டிக்கொண்டால் அவனே அனைத்தையும் தாங்கி நின்று, நம் முயற்சிகளை சாரதி போல் நின்று நடத்தி வைப்பான். தேவ அசுரரும் அவனைப் பணிந்து வேண்ட, பாற்கடலின் திருவயிற்றைக் கலக்கினான் அந்த மாயவன். அவனே, அன்னை யசோதை கயிற்றால் கட்டிப்போட்ட போது, அதற்குக் கட்டுப்பட்டுக் கிடந்தான்.

இதென்ன விந்தை!

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த

உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே

உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்

வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

கருத்து : இந்தப் பிரபஞ்சத்தில் அடைவதற்கு அரிய அருமையான பொருள் அந்த நாராயணன். தேவர்களும் அவனைக் கண்ணார தரிசித்து உயிரின் நித்தியப் பிணியான பசிப்பிணியைத் தீர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஆதார சக்தியாய் விளங்குகிற நீயே, வெண்ணெய் திருடி உண்டாய். துளசி மாலைகள் அணிந்த மாயவனே இது என்ன மாயம்?

இல்லையில்லை இது மாயம் இல்லை. தனக்குள் சகல உலகங்களும் அடங்கும் என்பதை அன்னை யசோதைக்கு உணர்த்தியவன் அவன். அவன் அள்ளித் தின்ற வெண்ணெய் எல்லாம் கோபியர்க்கு ஆசீர்வாதங்களாக மாறின. ஆகவே, இது மாயம் அல்ல; அவன் மகிமையே!

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல

இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே

நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி

மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே

கடல் வண்ணனே கண்ணா!

கருத்து: அடியார் பற்றுவதற்கு உகந்த மாலவனின் சிவந்த திருவடி களில் அமரர்கள் எல்லாம் தொழுகின்றன. அந்தத் திருவடிகளால் மூவுலகையும் அளந்தான் அவன். அதே திருவடிகளால்… பாண்டவர்களின் பங்கைப் பெற்றுத்தரும் நோக்கில் தூதுவனாய் நடந்தான்.

இது விந்தை இல்லையா!

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே

திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே

கருத்து : `வாமன அவதாரத்தில் மூவுலகையும் தன் சிறு பாதங்களின் இரண்டடியால் அளந்தது முறையன்று என்று கருதினான் போலும். அந்தக் குறையினைத் தீர்ப்பதற்காக, ராமாவதாரத்தில் தன் தம்பியோடு காட்டு வழியே பலகாதம் நடந்தான். அவ்வாறு நடந்தே சென்று இலங்கையை அழித்த அந்த இறைவனின் புகழைக் கேளாமல் இருக்கும் செவி என்ன செவி… திருமாலே, உன் பெருமைகளைக் கேட்காது இருக்கும் செவி என்ன செவி…’ என்று பாடுகிறார்கள் ஆய்ச்சியர்.

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்

விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்

திருவடியும் கையும் திருவாயும் செய்ய

கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே

கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே ( 5 )

கருத்து : `இந்த உலகில் பெரியவன் என்று போற்றத்தக்கவன் அந்தத் திருமால். உலகம் முழுதும் பார்க்க… திருமாலே உன் திருவடியும், உன் திருக்கையையும் திருவாயையும் காண்பதோடு நின்றுவிடாமல், எழில்மிகுந்த நின் திருக்கண்களையும் நாங்கள் காணவேண்டும். அவ்வாறு உன் கண் அழகைக் காணாத கண்கள் என்ன கண்கள்…’ என்று பாடி மருகுகிறார்கள் ஆய்ச்சியர்.

கண்ணன் வந்தான்!

கோகுலாஷ்டமி
கோகுலாஷ்டமி

‘தூய பெருநீர் யமுனைத் துறைவனை’ என்று கண்ணனோடு யமுனையையும் சேர்த்துப் போற்றுகிறாள் ஆண்டாள். அதர்மங்களை அழித்து புவனம் காக்க வந்த கிருஷ்ண கடவுள், அவதாரக் காலத்தில் தன் தோழர்களுடனான விளையாடல்களையும், யதுகுலத்தவருடனான தம்முடைய அருளாடல்களையும் நிகழ்த்தியது, யமுனையின் கரையில் அல்லவா! ஆகவே, கோதை நாச்சியார் இந்த நதிப் பெண்ணாளையும் சேர்த்து போற்றியது மிகப்பொருத்தம்தான்!

இப்படியான மகிமையைப் பெறுவதற்கு யமுனை நதியாள் அந்தப் புருஷோத்தமனை எவ்வாறெல்லாம் வேண்டியிருப்பாள்!

சற்றே புறக்கண்களை மூடி, மனக் கண்ணைத் திறந்துவைத்துக்கொள்ளுங்கள். சிந்தனைக்கலம் ஏறி பின்னோக்கிப் பயணித்து யுகங்களைக் கடப்போம். யமுனை தீரத்தில் பயணிப்போம்.

அதோ, நுங்கும்நுரையுமாக பொங்கிப் பாய்கிறாள் பாருங்கள் யமுனை. ஆரவாரத்துடன்கூடிய அவளின் ஆர்ப்பரிப்பைக் கூர்ந்துகவனித்தால் கேட்கும், அவளின் பிரார்த்தனைப் புலம்பல்கள்! செவிமடுப்போமா…

‘கிருஷ்ண எனும் பதத்துக்குக் கறுப்பு என்று பொருள் சொல்கிறார்கள் ஞானிகள். ஆனால், நீயோ நீலவான வண்ணத்தினன். பிறகு ஏன், இப்படியொரு பெயரும் பொருளும்!

ஓ! முதலும் முடிவுமற்ற இந்த அண்டப் பேரண்டம் கறுப்பு. அதன் கருப்பொருளான நீயும் ஆதியந்தம் இல்லாதவன். இந்த அளவற்ற அளவை – ஒரு வரையறைக்குள் அடங்கிவிடாத உனது பிரமாண்டத்தை, பேரண்டத்துடன் ஒப்பிட நினைத்து, `கிருஷ்ணன்’ எனும் திருநாமம் தந்தார்களோ… எனில், நீ எவ்வளவு பெரியவன்!

அன்றொரு நாள், நீ திரிவிக்கிரமனாய் வளர்ந்து விண்ணளந்தபோது, பிரம்மன் தனது கமண்டல நீரால் உன் திருப்பாதத்தைக் கழுவி பூஜித்தான். இறைவா, உன் திருப்பாதக் கமலங்களை ஸ்பரிசித்த புண்ணியத்தால் பிரம்மக் கமண்டலத்தின் நீர், ஆகாய கங்கையாய் அல்லவா பொங்கிப் பிரவாகித்தது. அதைச் சடாமகுடதாரியான பரமேஸ்வரன் தன் திருமுடியில் தாங்கியல்லவா கொண்டாடினார். கொடுத்துவைத்தது கங்கை.

கண்ணன் வந்தான்!

எனக்கும் உன் பாதம் தழுவும் பாக்கியம் கிடைக்காதா?

பூதலத்தில் திருவெஃகா என்றொரு திருத்தலம். அங்கே, தன்னை விடுத்து நான்முகன் தனியே யாகம் செய்கிறான் என அறிந்த நாமகள் கோபம் கொண்டாள். வேகவதி எனும் நதியாக மாறி மிக வேகமாகப் பாய்ந்துவந்தாள், யாகத்தை அழிக்க. அப்போது, அவள் வரும் வழியில் பாம்பணை மீது பள்ளிகொண்டு, அணையாக மாறி அவளைத் தடுத்தாட்கொள்ளவில்லையா!

கங்கைக்கும் சரஸ்வதிக்கும் கிடைத்த திருவருள் எனக்கும் கிடைக்காதா?

மாலவா! உனது எழிலுருவைப் பாதாதிகேசமாய் தரிசிக்க ஆசை. ஆகவே, உனது பேருருவைச் சுருக்கிக் கொள். ஒரு குழந்தையாய் கொஞ்சி தவழ்ந்து வா. முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற்போல் திகழும்… உன் பொற்பாதங்களின் விரல்கள் பத்தையும் பற்றி கண்களில் ஒற்றி மகிழும் பெரும் பாக்கியத்தை எனக்குத் தா!’

யமுனா வேண்டுவதைக் கேட்டீர்களா! இந்த நதிப்பெண்ணுக்குத்தான் எவ்வளவு ஏக்கம்? சமுத்திரத்தை உள்ளங்கைக்குள் அடக்கிவிட முடியுமா? முடியாதுதான். ஆனால், யமுனையின் இந்த ஏக்கமும் ஆவலும் பக்தியால் விளைந்தது. அதனால் பகவானும் அவளுக்கு வசப்பட்டான். எப்போது தெரியுமா? துவாபரயுகத்தில் – மதுசூதனன், யதுகுல நாயகனாய் அவதரித்துவந்தபோது!

அதுபற்றி அறியும் முன், எம்பெருமான் உதித்த யதுகுலத்தின் மாண்புகளை அறிவோம்.

கண்ணன் வந்தான்!

சந்திர வம்ச அரசர்களைப் பட்டியலிட்டு, அவர்களின் பெருமைகளைப் பரீட்சித்துவுக்கு சுகபிரம்மர் கூறியதாக விவரிக்கிறது ஸ்ரீமத் பாகவதம். அதன்படி, சந்திர வம்சத்து அரசர்களில் மிகவும் புகழுடன் திகழ்ந்தவர் புரூருவன். இவரு டைய மகன் ஆயு. அவருக்கு ஐந்து புத்திரர்கள். அவர்களில் மூத்தவன் நகுஷன்.

பாட்டனாரைப் போன்றே புகழ்பெற்ற நகுஷனுக்கு, ஆறு பிள்ளைகள் பிறந்தனர். யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியதி, கிருதி ஆகியோரே அந்த ஆறு பேர். இவர்களில் மூத்தவனான யதிக்குப் பட்டாபிஷேகம் சூட்ட விரும்பினார் நகுஷன். ஆனால், ராஜ்ஜியம் வேண்டாம் என மறுத்துவிட்டான் யதி. எனவே, அவனுக்கு அடுத்தவனான யயாதிக்குப் பட்டாபிஷேகம் செய்துவைத்துவிட்டு கானகம் சென்றார் நகுஷன்.

யயாதி, சுக்ராச்சார்யரின் மகள் தேவயானியை யும் அசுர வேந்தனின் மகளான சர்மிஷ்டை என்பவளையும் மணந்தான். தேவயானிக்கு யது, துர்வஸு என்று இரண்டு மகன்கள். சர்மிஷ்டைக்கு த்ருஷ்யன், அனு, பூரு ஆகிய மூன்று மகன்கள். இவர்களில் யயாதி – தேவயானி தம்பதியின் மூத்த மகனான யதுவிடமிருந்து தொடங்குகிறது, பகவான் கிருஷ்ணன் அவதரித்த யது வம்ச சரித்திரம். பரிசுத்தமான இந்த யது வம்ச சரித்திரத்தைக் கேட்டால், சகல பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும் என்கிறது பாகவதம்.

கண்ணன் வந்தான்!

யதுவின் மூத்த மைந்தன் ஸகஸ்ரஜித். இவன் மகன் சதஜித். இந்த சதஜித்தின் வம்சத்தில் வந்தவர்களே யாதவர், விருஷ்ணிகள், மாதவர்கள் எனப் பல பிரிவுகளாய் இருந்தனர்.

யதுவின் இரண்டாவது மகன் க்ரோஷ்டு. இவன் பிள்ளை விருஜினவான். இவன் குலத்தில் பிறந்தவர்கள் போஜர்கள், சாத்வதர்கள் என அழைக்கப்பட்டனர். இப்படியாக யதுகுலத்தில் தோன்றிய பல தலைமுறைகளுக்குப் பிறகு தேவமீடன் என்பவன் பிறந்தான். இவன் மகன் பெயர் சூரன். இவருக்குப் பிறந்தவரே, நம் கண்ணனின் தந்தை வசுதேவர். அவருக்கு ஆனகதுந்துபி என்று இன்னொரு பெயரும் உண்டு. ஏன் தெரியுமா? வசுதேவர் பிறந்தபோது, தேவதுந்துபியும் ஆனக வாத்தியங்களும் முழங்கினவாம். ஆகையால் இப்படியொரு விசேஷ நாமகரணம்! வசுதேவருக்கு ஏழு மனைவியர். அவர்களில் கடைசியானவளே, நம் தேவகி தாயார்.

வசுதேவர்- தேவகிக்குக் கோலாகலமாக திருமணம் நடந்த கதையும், மணமக்கள் இருவரை யும் ரதத்தில் அமர்த்தி, இளவரசனான கம்சன் தேரை செலுத்த முற்பட்டபோது அசரீரி ஒலித்து, ‘இந்தத் தம்பதிக்குப் பிறக்கப்போகும் எட்டாவது மகனால் உனக்கு அழிவு நிச்சயம்’ என்று கம்சனை எச்சரித்த சம்பவமும் நாமறிந்ததே.

இதனைத் தொடர்ந்து கம்சன் தேவகியைக் கொல்ல முற்பட்டதையும், வசுதேவரின் வேண்டு தலுக்கு இணங்கி அவர்களைக் கொல்லாமல் சிறையில் அடைத்த கதையையும், அவர்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் கொன்றுவிட, ஏழாவது கரு யோக மாயாவின் மூலம் ரோகிணியின் மணிவயிற்றை அடைந்து பலராமனாகப் பிறந்ததையும் நாம் அறிவோம்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா? இறை சித்தத்தின்படி யோக மாயா, நந்தகோபரின் மனைவி யசோதாவின் மணிவயிற்றில் கருவாகி, பெண் குழந்தையாய் பிறந்தாள். இங்கே சிறையில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது.

எங்கும் சகல சுபசகுனங்களும் நிறைந்து மங்கலம் சூழ, தெளிவான வானில் நட்சத்திரங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்க, கிரகங்கள் யாவும் நல்லதொரு நிலைக்கு நகர்ந்து நிற்க, ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரத்தில்… பூமழை பொழிய, தேவ துந்துபிகள் முழங்க மதுசூதனன் பிறந்தான்; நம் கவலைகள் நீங்க கண்ணன் வந்தான்!

எவ்வளவு அழகு பாருங்கள்..!

நீலமேனியில் பீதாம்பரம் ஒளிவீச, மார்பில் ஸ்ரீவத்சமாகிய மரு, கழுத்தில் கௌஸ்துப மணி, கைகளில் கங்கணம், தோள்வளை துலங்க சங்கு, சக்கரம், கதாயுதம் முதலான ஆயுதங்களுடன் சதுர்புஜ நாயகனாய் அந்தத் தெய்வக்குழந்தை தவழ்வதைக் காணக் கண்கோடி வேண்டும்!

தொடர்ந்து… கோகுலத்தில் யசோதாவிடம் தன்னைச் சேர்த்துவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையைச் சிறைக் கொட்டடிக்கு எடுத்துவரும்படி தெய்வக்கட்டளை பிறந்தது.மறுகணம் வசுதேவரின் விலங்குகள் அறுபட, சிறைக்கதவுகளும் தானாகத் திறந்துகொள்ள, குழந்தையைக் கூடையில் சுமந்தபடி புறப்பட்டார் வசுதேவர். பெரும் மழை கொட்டித் தீர்த்தது.

வழியில் ஆர்ப்பரிப்புடன் குறுக்கிட்டாள் யமுனை நதியாள். இந்த தருணத்துக்காகத்தானே அவள் காத்திருந்தாள். கண்ணனின் பாதக் கமலங்களை ஸ்பரிசிக்க, சிவந்து திகழும் அந்தத் தாமரைப் பாதங்களின் சிற்றிதழ்களாகத் திகழும் சிறுவிரல்களைப் பற்றிக்கொள்ள பரபரத்தாள்.

ஆஹா, அந்தத் தெய்வக்குழந்தையின் பாதங்கள் தான் எவ்வளவு அழகு. ஒரு பாதத்தில் சங்கு; மற்றொன்றில் சக்கரக் குறி!

‘இறைவா! உன் பாதம் பணிகிறேன்; அந்தப் புனிதக்குறிகளை என் தலையில் பதித்துவிடு; பெரும்பேறு அடைவேன்’ என அரற்றுகிறாளோ அந்த நதிப்பெண்ணாள்… யமுனையின் இரைச்சல் இன்னும் அதிகமானது!

ஆனந்தக் கூச்சலுடன் பொங்கி எழுந்து நீர்த்திவலைகளை அள்ளி வீசி, கண்ணனை அபிஷேகிக்க முற்பட்டாள். வசுதேவரின் பாடுதான் திண்டாட்டமாகிவிட்டது. அவரது நாசியைத் தொட்டுச் சென்றது யமுனையின் நீர்மட்டம். திக்குமுக்காடிப் போனார் கண்ணனின் தந்தை!

கிருஷ்ணக் குழந்தையும் அதைப் புரிந்து கொண்டது. மெள்ள தனது பிஞ்சுப் பாதத்தை குடலைக்கு வெளியே நீட்டி, நீர்ப்பரப்பில் போட்டது. அவ்வளவுதான்… கொதிக்கும் உலையில் நீரூற்றியது போன்று, யமுனையின் ஆரவாரம் அடங்கி அமைதியானது.

பேரமைதி பூரணத்துவத்தின் அடையாளம்.

எத்தகையதொரு கொடுப்பினை யமுனைக்கு! மிகப் புனிதம் பெற்று விட்டாள் யமுனா. யமுனா நதி மட்டுமா, ஒட்டுமொத்த பூமியும் அல்லவா புனிதம் அடைந்தது, கிருஷ்ணாவதாரத்தால்.

நாமும், வரும் கோகுலாஷ்டமியில் அந்த அவதார நாயகனை அன்போடு நம் வீட்டுக்கு அழைப்போம்; அருளோடும் பொருளோடும் கண்ணன் வருவான்; நம் கவலைகளைத் தீர்ப்பான்!

பானைக்குள் பூதம்!

யர்பாடியில் கண்ணன் நிகழ்த்திய லீலைகளைக் கதை கதையாய்ப் பாடி வைத்திருக்கிறார்கள் அடியார்கள். தயிர் கடையும் அம்மாவிடம் வெண்ணெய் வேண்டி வருவான்.

‘`அம்மா அதென்ன பானைக்குள் ‘கர்… புர்…’ என்று சத்தம்’ எனக் கேட்பான்.

கண்ணன் வந்தான்!

யசோதைக்கு அவன் திட்டம் தெரியும் என்பதால், அவனை பயம்காட்ட ‘`பானைக்குள் பூதம்’’ என்பாள்.

கண்ணன் லேசுப்பட்டவனா?! ‘`அப்படியா! அந்தப் பூதத்தை என்னிடம் விட்டுவிடுங்கள்; ஒரு கை பார்க்கிறேன்’’ என்றபடி திரண்டு நிற்கும் வெண்ணெயைக் கைகொள்ளாமல் எடுத்துக்கொண்டு ஓடி ஒளிவான். யசோதைக்கே இப்படியென்றால், ஆயர்பாடியின் மற்ற ஆய்ச்சியர்கள் பாடுகளைச் சொல்லி மாளாது! அந்தக் கதையை பெரியாழ்வார் மிக அழகாக விவரிக்கிறார்.

வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை

வெற்பிடை இட்டு அதன்ஓசை கேட்கும்

கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்

காக்க கில்லோம் உன்மகனைக் காவாய்

புண்ணில் புளிப்பெய்தால் ஒக்கும் தீமை

புரைபுரையால் இவைச் செய்யவல்ல

அண்ணற்கு கண்ணான் ஓர்மகனைப் பெற்ற

அசோதை நங்காய் உன் மகனைக் காவாய்

கருத்து: ‘வெண்ணெய் திருடுகிறான். அதாவது பரவாயில்லை. வெண்ணெய் காலியானதும் வெறும் கலத்தை மலைப் பாறைகளில் போட்டு உடைத்து, அந்தச் சத்தத்தில் மகிழ்கிறான்!

இந்த சேஷ்டைகளை எல்லாம் எங்கிருந்து கற்றானோ தெரியவில்லை. பலராமனுக்கு தம்பியா இவன். புண்ணில் புளியைக் கரைத்து ஊற்றியது போல் இருக்கிறது உன் பிள்ளையின் சேஷ்டை. அவனைக் கொஞ்சம் அடக்கி வை’

சீடை, முறுக்கு ஏன்?

கிருஷ்ண ஜயந்தியன்று வீடுகளில் சீடை, முறுக்கு என்று நிவேதனம் செய்கிறோமே… இதற்கு என்ன காரணம்?

கண்ணன் வந்தான்!

கிருஷ்ண பகவான், நள்ளிரவு வேளையில் சிறையில் அவதரித்தார். இந்தத் தகவல் கம்சனுக்குத் தெரிந்தால் ஆபத்தாயிற்றே!

எனவே, கண்ணன் பிறந்ததும் மேளதாளம் உள்ளிட்ட மங்கல ஓசை எதுவும் எழுப்பப்படவில்லை. அதேநேரம், துர்ச்சொப்பனம் ஒன்று கண்டான் கம்சன். அதன் காரணமாக தூக்கத்திலேயே பற்களை நறநறவென்று கடித்தான். அந்தச் சத்தமே பகவான் கண்ணன் அவதரித்ததற்கான மங்கல ஒலியானதாம்!

இதை உணர்த்தவே… கடித்தால் நறநறவென்று சத்தம் கேட்கும் சீடை, முறுக்கு முதலான பட்சணங்களைக் கிருஷ்ண ஜயந்தியன்று நிவேதனம் செய்கிறோம்

மழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள மலையன்குளத்தில் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரியாங்கோனார், தம்பி சின்னாங்கோனார் மற்றும் அவர்களது உறவினர் கழக்குடி கோனார் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான செம்மறி மற்றும் வெள்ளாடுகள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தனர்.

Continue reading →

ஆடி – கேட்டை அற்புத நடவு விழா!

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில், மாவூர் எனும் ஊருக்கு வலது புறம் உள்ள திருநாட்டியத்தான்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது, ரத்தினபுரீசுவரர் ஆலயம்.

நடவு விழா
நடவு விழா

இறைவன்: ஸ்ரீரத்தினபுரீசுவரர் (ஸ்ரீமாணிக்கவண்ணர்)

இறைவி: ஸ்ரீமாமலர் மங்கை (ஸ்ரீரத்தினபுரீஸ்வரி)

டராசப்பெருமானின் திருநடனத்டை தரிசிக்க ஆவல் கொண்ட தேவலோகத்து வெள்ளை யானையான ஐராவதம், இங்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி, மாவிலங்கை மரத்தடியில் இறைவனைப் பூசித்து வழிபட்டது. இறைவனும் மனம் உருகி இவ்வுலகையும் உயிர்களையும் காக்கும் பொருட்டு இங்கு திருநடனம் புரிந்தார். அதனால் திருநாட்டியத்தான் குடி என்ற பெயர் உருவானது. யானை வழிபட்டதால் ஈசனுக்கு கரிநாதேசுவரர் என்ற திருப்பெயரும் உண்டு.

Continue reading →

புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் அருளும் கேது பகவான்!!

நவக்கிரகங்களில் பாபக் கிரகங்கள், சுப கிரகங்கள் என இரண்டு பிரிவாக கிரகங்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. பாவக் கிரகங்கள் என்று கூறினாலும் அந்த கிரகங்கள் அனைத்துமே எப்போதும் தீமையான பலன்களை தருவதில்லை எனினும் இந்த பாபகிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருந்தால் மிகவும் சிரமங்களை வாழ்வில் சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். அந்த கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் நிழல் கிரகங்களான ராகு  கேது கிரகங்களில் கேது கிரகம் தாய்வழி பாட்டனார் பற்றி கூறும் கிரகமாக இருக்கிறது. மேலும் ஒரு மனிதனுக்கு முக்தியை அளிக்கவல்ல கிரகமாகவும் இது இருக்கிறது. அத்தகைய கேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையை போக்குவதற்கான ஒரு எளிய பரிகார முறையை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Continue reading →

அத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…

காஞ்சி’ என்றால் ‘ஒட்டியாணம்’ என்று பொருள்.

அத்திவரதர்
அத்திவரதர்

காஞ்சிபுரம், பூமித்தாய் தன் இடையில் அணிந்திருக்கும் அணி என்கிறது தலவரலாறு. கோயில் நகரமென்று பேறுபெற்ற இந்நகரில் பார்க்கும் இடமெங்கும் பரமனின் ஆலயங்கள். நோக்கும் திசையெங்கும் திவ்ய தேசங்கள். பட்டுநெசவுக்குப் புகழ்பெற்ற இந்த நகரம், தற்போது திருவிழாக்கோலம் பூண்டு பளபளக்கிறது.

Continue reading →

கர்ப்பிணிகள் கவனத்துக்கு…

ரு பெண்ணின் வயிற்றில் கரு உருவானதிலிருந்து குழந்தை பிறப்பு வரையிலும் 10 மாதங்களுக்கு அதன் வளர்ச்சியில் கிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அதனால், கர்ப்பம் தரித்தது முதல்… ஒவ்வொரு மாதமும் அந்தக் கருவை ஆளுமை செய்யும் கிரகத்துக்குரிய தெய்வத்தை வணங்குவது சிறப்பு.

முதல் மாதம்: கரு உருவாகும். இதற்குக் காரக கிரகம் சுக்கிரன். ஸ்ரீபுவனேஸ்வரி, ஸ்ரீலட்சுமி மற்றும் இந்திராணியை வணங்கலாம்.

Continue reading →

நாளை என்பதில்லை நரசிம்மரிடம்! – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19

தாருகாவனம்’ என்று நான்மறைகள் போற்றும் மிகப் பழைமை வாய்ந்த தலம் `முன்னூர்’ எனப்படும் `முந்நூற்று மங்கலம்’. புருஷோத்தம நல்லூர், திரிசதபுரம், ராஜநாராயண சதுர்வேதி மங்கலம் என்று பல பெயர்களில் வரலாற்று ஏடுகள் முன்னூரைக் குறிப்பிடுகின்றன.   

தவயோகிகளும் வேதவிற்பன்னர்களும் வாழ்ந்ததால் சிறப்புப் பெற்ற இந்தத் தலத்தில் ஸ்ரீபதியான வைகுண்டவாசன், `ஸ்ரீஅருளாளப்பெருமான்’ எனும் திருநாமத்தோடு, தன் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில், கற்பனைகள் அனைத்தையும் மிஞ்சும் பேரழகுடன் எழுந்தருளியுள்ளார்!

பூரி ஜகந்நாதர் ஆலயத்துக்குப் புருஷோத்தமபுரி என்ற ஒரு திரு நாமம் உண்டு. இந்த ஆலயம் அமைந்த பகுதியை (தற்போதைய ஒடிசா மாநிலம்) ஆண்ட `கஜபதி’ வம்ச மன்னர்களுக்கு, முன்னூர் அபிமானத்தலம் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இந்தத் தலத்துக்கு `புருஷோத்தம நல்லூர்’ என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில், `சித்திர மேழி விண்ணகர் எம்பெருமாள்’ என இந்தத் தலத்தின் பெருமாள் பூஜிக்கப்பட்டாராம். ஆகவே, இத்தலம் பராந்தகச் சோழனின் காலத்துக்கும் முந்தையது என்பதை அறிய முடிகின்றது. சோழர்களும் பாண்டியர்களும் இத்தலத்துக்குப் பல கொடைகளை அளித்துள்ளனர்.

இந்தத் தலத்தில் அருள்மிகு நரசிம்மர் குடியேறிய கதை,  மிகவும் சிலிர்ப்பானது.

Continue reading →

சனி பகவானின் அருள் பெறலாம்…

னி பகவான் நீதிதேவன் என்று போற்றப்படுபவர். ஒருவரின் ஜாதகத்தில் சனி நல்ல இடத்தில் அமைந்திருப்பது மிக விசேஷம். அப்படியில்லாமல் ஜாதகத்தில் அவர் பகை, நீசம் பெற்றிருந்தால் அவரால் கிடைக்கக்கூடிய நற்பலன்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.

ஒருவருக்கு ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி நடைபெறும் காலங்களிலும், சனி தசை நடைபெறும் காலங்களிலும் சனீஸ்வரரைப் ப்ரீதி செய்வதற்காகப் பல எளிய பரிகாரங்களை நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அவற்றில் சில பரிகாரங்களை அறிந்துகொள்வோம்.

னிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று விரதம் கடைப்பிடித்தால், நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

னிக்கிழமைகளில் சனிபகவானின் அதிபதியான மகாவிஷ்ணுவைப் பிரார்த்தித்து விஷ்ணு சஹஸ்ரநாமம் அல்லது அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.

னிக்கிழமைகளில் வரும் மகா பிரதோஷ புண்ணிய தினத்தில், சிவாலயங்களில் வில்வ தளத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

ஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்.

ங்கடஹர சதுர்த்தி தினத்தில், விநாயகருக்கு எட்டு சிதறு தேங்காய்களை உடைத்து, நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், சனியின் பாதிப்புகள் குறையும்.

னிபகவானின் தானியம் எள். அந்த எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) அவருக்கு விளக்கு ஏற்றி வழிபடுவதால், நன்மைகள் பெருகும்.

னீஸ்வரருக்கு எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து, அதில் காகத்துக்குக் கொஞ்சம் வைத்துவிட்டு, நாம் சாப்பிட்டால் நன்மைகள் பெருகும்.

ல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டி ஆகியவற்றை ஏழை, எளியோருக்குத் தானம் செய்யலாம். அதேபோல், சனி ஆதிக்கம் செலுத்தும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாள்களில் அன்னதானம் செய்வது சிறப்பு.

டக்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தால், சனிபகவான் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.