Category Archives: ஆய்வுகளும் முடிவுகளும்

இரண்டும் பெண் குழந்தையா? சந்தோஷப்படுங்க..!

– புதிய ஆய்வில் சுவாரஸ்ய உண்மைகள்

2 பெண் குழந்தைகள் இருக்கும் வீடுதான் ஆனந்தமயமான வீடு என்கிறது புதிய ஆய்வு.

`ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண்’ என்று நம்மூரில் பழமொழி சொல்வார்கள். முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் `மகாலட்சுமியே வந்துவிட்டாள்’ என்று மகிழும் பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால் அடுத்த குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால், `ஏழு லோகத்திலும் இல்லாத சங்கடம் எனக்கு வந்துவிட்டது’ என்று வருந்த தொடங்குவார்கள். இனி அப்படி சங்கடப்பட வேண்டியதில்லை. இரண்டும் பெண் குழந்தைகள் உள்ள வீடுதான் மிகமிக சந்தோஷமான குடும்பம் என்று புதிய ஆய்வில் கண்டுபிடித்திருக் கிறார்கள்.

ஆயிரக்கணக்கான குடும்பங்களை ஆய்வு செய்ததில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள் இங்கே…

ஒரு வீட்டில் இரண்டுமே பெண் குழந்தைகளாக இருந்தால் அந்தக் குழந்தைகள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளாதாம். ஒருவருடன் ஒருவர் இணைந்து விளையாடுவார் களாம். அரிதாகத்தான் அம்மா, அப்பாவுக்கு தொல்லை தருவார்கள். நீங்கள் போகக்கூடாது என்று தடுக்கும் மண்மேடு, புழுதியில் எல்லாம் சென்று விளையாடாமல் சமர்த்து என்று பெயர் வாங்குவார்களாம்.

அதேபோல பெண் குழந்தைகள் அதிகமாக கூச்சல் போடுவதில்லை. அவர்கள் ஒருவரை யொருவர் கண்டு கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொள்வது ரொம்ப அபூர்வம். அவசர நேரத்தில் அம்மாவிடம் செல்லமாக இருக்கும் குழந்தையை அப்பாவிடம் விட்டுச் சென்றாலும் அடம்பிடித்து அழ மாட்டார்களாம். அந்த சூழலுக்கேற்ப பெற்றோருடன் அடம்பிடிக்காமல் பிரியமாக இருந்து ஒத்துழைப்பார்களாம்.

அக்கம் பக்கத்தவர்கூட இந்த சகோதரிகளை விரும்ப தொடங்கிவிடுவார்கள் என்கிறது ஆய்வு முடிவு. இந்த குழந்தைகளின் கலகலப்பான பழக்கவழக்கங்களும், சுற்றி இருப்பவர்களுக்கு உதவும் குணம், ஒத்துழைக்கும் குணம் போன்றவை மற்றவர்களையும் கவர்ந்துவிடுகிறது. அதனால் சுற்றியுள்ளவர்களும் இவர்களின் `விசிறி’ ஆகிவிட, வீட்டிலும், வீட்டுக்கு வெளியிலும் ஒரு சந்தோஷமான சூழல் உருவாகிவிட வாழ்வே வசந்தமாகிவிடுவதாக தெரிய வந்துள்ளது.

இரண்டு பெண் குழந்தைகளுக்கு அடுத்தபடியாக ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ள வீடு ஓரளவு சந்தோஷமாக இருக்கிறதாம். இந்தக் குழந்தைகள் 86 சதவீத அளவில் ஒருவருக்கொருவர் பாசத்துடன், இணக்கமான நட்பு காட்டுவதாக தெரிய வந்துள்ளது.

சந்தோஷம் அனுபவிப்பதில் மூன்றாவது நிலையில் இருக்கிறார்கள் 2 ஆண் குழந்தைகள் உள்ள குடும்பத்தினர். மற்றவருக்காக பல விஷயங்களை புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்பதில் ஆண் குழந்தைகள் கெட்டிக்காரர்களாம். ஆனால் இவர்கள் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் அரவணைப்பைத்தான் விரும்புவதாக தெரிகிறது. மற்றவர் பொறுப்பில் விட்டுவிடும் சூழல் வந்தால் அடம்பிடிப்பார்கள் என்கிறது, ஆய்வு.

பயம் தரும் இடதுகைப் பழக்கம்!

இடது கை பழக்கம் குறித்த ஆய்வு ஒன்று இப்படி கூறுகிறது.

அதாவது, திகில் காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்படத்தை பார்த்து அதிகம் பயந்தவர்கள் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

தாங்கள் பார்த்த அந்த திரைப்படம் பற்றி கருத்து கேட்கப்பட்ட போது இடது கை பழக்கமுள்ளவர்கள் மிகவும் பயந்து போனவர்
களாக காணப்பட்டார்கள். மேலும், இவர்களது கருத்துக்களும் கோர்வையாக இல்லை.

தங்களது இந்தக் கண்டுபிடிப்பு, அச்சம் தரும் சூழ்நிலைகளுக்கும் அப்போது ஏற்படும் மூளையின் செயல்பாடுகளுக்குமுள்ள தொடர்பு குறித்த ஆராய்ச்சிக்கு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது எடின்பர்க்கிலுள்ள குயின் மார்கரெட் பல்கலைக்கழகம். இது வரையில் இப்படிப்பட்ட திகில் படம் வந்ததில்லை என்ற அளவிற்கு பயங்கரங்கள் நிறைந்த `சைலன்ஸ் ஆப் தி லேம்ப்ஸ்’ என்ற திரைப்படம்தான் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது.

 

புத்தகம் வாசிக்கும் பழக்கம் மன அழுத்தத்தை குறைக்கும் ஆய்வில் தகவல்


அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆப் மெடிசின் பல்கலைகழகத்தின் மருத்துவ துறையின் பேராசிரியர் பிரையன் ப்ரைமேக் தலைமையிலான குழு ஆய்வொன்று நடத்தியது. அதில், டீன்&ஏஜ் பருவத்தை அடைந்த 106 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடம், இசை, திரைபடங்கள் அல்லது டி.வி., நாளிதழ்கள், இணையதளம், புத்தகங்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகிய 6 வகை ஊடகங்களின் பயன்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக இரு மாதங்களாக 60 முறை அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த ஆய்வில், இசையை அதிகமாக கேட்கும் இளம் வயதினர், இசையினை மிக குறைவாக கேட்பவர்களுடன் ஒப்பிடும் பொழுது 8.3 மடங்கு அதிகமாக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. அதே வேளையில், புத்தகங்கள் அதிகம் வாசிப்போர், குறைவாக புத்தகங்கள் வாசிப்பவர்களுடன் ஒப்பிடும் பொழுது பத்தில் ஒரு பங்கு அளவே மிக குறைவாக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். எனவே, வாசித்தல் என்பது மன அழுத்தத்தை வெகுவாக குறைப்பதில் பெரும் பணியாற்றுகிறது. மேலும், படிப்பதை தவிர்த்து பிற ஊடகங்களிலேயே அதிகமானோர் கவனத்தை செலுத்துவது தற்போது அதிகரித்துள்ளது என்றும் ப்ரைமேக் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார.

காபி, டீ அதிகமாக குடிப்பதற்கு மரபணு தொடர்களே அடிப்படை: ஆய்வாளர்கள் கருத்து


அமெரிக்காவின் மேரிலேண்ட் என்ற இடத்தில் அமைந்துள்ள தேசிய புற்றுநோய் கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் நீல் கேபோராசோ என்பவர் ஆய்வு ஒன்று மேற்கொண்டார். அந்த ஆய்வானது காபீன் என்ற பொருள் அடங்கிய டீ, காபி, சாக்லேட், குளிர்பானம் போன்றவற்றை அதிகமாக எடுத்து கொள்வதை அடிப்படையாக கொண்டு அமைந்தது. இதற்காக ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டனர். அதில், இரண்டு மரபணு தொடர்கள் காபீன் என்ற பொருளை அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது என தெரிய வந்துள்ளது. உடலில் உள்ள காபீன் பொருளை உடைக்கும் பணியோடு சி.ஒய்.பி.1.ஏ.2 என்ற ஜீன் தொடர்பு கொண்டுள்ளது. இந்த ஜீனின் செயல்பாடுகளை ஏ.எச்.ஆர். என்ற மற்றொரு ஜீன் ஒழுங்குபடுத்துகிறது. எனவே ஒருவர் காபி அல்லது கோலா அருந்துவது இத்தகைய இரு மரபணுக்களின் தூண்டுதலின் அடிப்படையிலேயே அமைகிறது என ஆய்விலிருந்து தெரிய வருகிறது.

உலக மொழிகளின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா: ஆய்வில் தகவல்


ஆஸ்திரேலிய நாட்டில் அமைந்துள்ள குயின்ஸ்லாண்ட் பல்கலைகழகத்தின் ஆய்வாளர் குயென்டின் அட்கின்சன் என்பவர் தலைமையில் முதன்முதலில் மொழியானது எங்கு தோன்றியது என ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் பேச்சில் இருந்து தான் தற்போது பரவலான மக்களால் பேசப்படும் மொழிகளான ஆங்கிலம், வங்காளம், ஜப்பான் மற்றும் இந்தி உட்பட உலகின் பல்வேறு மொழிகளும் தருவிக்கப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விற்காக அட்கின்சன், உலகளவில் பேசப்படும் 504 மொழிகளை எடுத்து கொண்டார். அந்த மொழிகளில் பயன்படுத்தப்படும் உச்சரிப்புகள் மற்றும் வெவ்வேறு சப்தங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தார். ஆய்வில், மொழியானது ஏறத்தாழ 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், தற்காலத்தில் வாழும் மனிதர்கள் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை மையமாக கொண்டு வாழ்ந்துள்ளனர். பின்னர் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து உலகின் பல இடங்களுக்கும் பரவி வாழ ஆரம்பித்துள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்டவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்ந்த போது அங்கு பேசப்பட்ட மொழியும் நிலைத்துள்ளது. அதுவே, சிறு சிறு குழுக்களாக மக்கள் பிரிந்து செல்லும் போது அவர்களின் இடையே பேசப்பட்ட மொழி காலப்போக்கில் மாற்றம் பெற தொடங்கியது. தலைமுறைகள் மாற மாற மொழிகளும் மாற்றம் பெற்றுள்ளன. அதில், ஆப்பிரிக்காவில் ஆரம்பகாலத்தில் பேசப்பட்ட மொழியின் சப்தங்கள் மற்றும் உச்சரிப்புகள் ஆகியவை படிப்படியாக மறைந்து போயுள்ளன என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிற

தனிமையா…? `சிக்கன் சூப்’ குடிங்க!

`தனிமையில் வாடுகிறீர்களா…? `சிக்கன் சூப்’ பருகுங்க’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

`சிக்கன் சூப்’, உருளைக்கிழங்கு மசியல், பாலாடைக்கட்டியுடன் `மக்ரோனி’ போன்றவை நலமளிக்கும் உணவுகள். தனிமையால் ஏற்படும் வெறுப்பை, விரக்தியை அவை போக்கும் என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

உளவியல் அறிவியல் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் அவர்கள் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த உணவுகள் ஒருவேளை ரத்த நாளங்களுக்கு நன்மை பயப்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், சலிப்பான உணர்வுகளைத் தணிய வைக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நன்றாக இருக்கும் அல்லது திருப்திகரமான உணர்வைத் தரும் என்று உறுதி கூறுகிறார்கள்.

இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளரும், பபலோ பல்கலைக் கழக மாணவருமான ஜோர்டான் டிராய்சி, “எனது குடும்பத்தைப் பொறுத்தவரை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது” என்கிறார்.

இவருடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டவர் ஷிரா கேப்ரியல். சமூகவியல் விஷயங்களில், மனிதர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதர் அல்லாத விஷயங்களைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்தனர்.

ஒருவருக்கு நெருக்கமானவர், அன்புக்குரியவர் ஏற்படுத்தும் அதே தாக்கத்தை நலமளிக்கும் உணவும் ஏற்படுத்துமா என்று டிராய்சி யோசித்திருக்கிறார்.

“நாங்கள் செய்த ஆய்வில், பொதுவாக நலமளிக்கும் உணவுகள், நமக்குப் பிடித்தவர்கள் விரும்பிச் சாப்பிடுபவை என்று தெரியவந்துள்ளது” என்கிறார் டிராய்சி.

“குறிப்பிட்ட உணவுகளைப் பற்றி நினைப்பது அல்லது சாப்பிடுவது, நமக்கு நெருக்கமானவர்களை ஞாபகப்படுத்துகிறது. நாம் பிறருடன் எப்போதும் தொடர்பு வைத்திருக்கிறோம் என்று உணர மக்கள் பல வழிகளை வைத்திருக்கிறார்கள் என்பதை எங்கள் ஆய்வு உணர்த்துகிறது” என்று முடிக்கிறார், ஜோர்டான் டிராய்சி.

நல்லது, கெட்டது குழந்தைகளுக்கும் தெரியும்!

`எது சரி, எது தவறு’ என்பதெல்லாம் வளர்ந்தவர் களுக்குத்தான் தெரியும், குழந்தைகளுக்குத் தெரியாது என்று நாம் நினைக்கிறோம், கூறுகிறோம். ஆனால், எது சரியல்ல என்பது குழந்தைகளுக்கும் தெரியும், ஒரு விளையாட்டில் எவ்வாறு நியாயமாக நடக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதுதொடர்பான ஆய்வை ஒரு சர்வதேச ஆய்வுக் குழு மேற்கொண்டது. இதில், மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு முயற்சியில் வெற்றி பெற்றால், சில பரிசுப் பொருட்களைப் பெறுமாறு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இதில், பரிசுப்பொருள்களை எல்லாவற்றையும் ஒரே குழந்தை வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம். ஏற்கனவே சிம்பன்சி குரங்குகளிடம் இதுமாதிரியான ஆய்வை மேற்கொண்டபோது அவற்றிடையே ஒற்றுமையின்மை வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“குழந்தைகளும் அதே மாதிரி செயல்படுகிறார்களா என்று நாங்கள் பார்த்தோம்” என, ஆய்வாளர்களில் ஒருவரான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெலிக்ஸ் வார்ன்கென் கூறுகிறார்.

கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு கயிறைப் பிடித்து இழுத்தால், இனிப்பு, ஸ்டிக்கர் போன்ற பரிசுப் பொருட்கள் கிட்டும். ஒரு குழந்தை மட்டும் தனியாகக் கயிறை இழுக்க முடியாது. எனவே ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று குழந்தைகளும் சேர்ந்து கயிறை இழுத்தார்கள். சிறு சண்டை, சச்சரவும் இன்றி கிடைத்த பொருட்களை நியாயமாகப் பகிர்ந்துகொண்டார்கள். “அந்தக் குழந்தைகளுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்” என்கிறார், ஆய்வாளர் வார்ன்கென்.

முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்


சாதாரணமாக எந்தவொரு நல்ல செயல் ஆரம்பிப்பதற்கு முன்பும் இறைவனை வழிபடுவது பெரும்பாலானோரின் வழக்கம். சிலர் தங்களது பெற்றோரிடம் ஆசி பெறுவர். மேலும் சிலர் தங்களது முன்னோர்களை நினைத்து ஒரு செயலை தொடங்குவார்கள். தற்போது இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆஸ்திரிய நாட்டில் அமைந்துள்ள கிராஸ் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள் அமைந்துள்ளன. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கிறது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்காக அவர்கள் 80 மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களிடம் தாத்தா, தாத்தாவிற்கு தாத்தா மற்றும் 15-வது நூற்றாண்டினை சேர்ந்த முன்னோர்கள் ஆகியோரை 5 நிமிடங்கள் நினைத்து கொள்ளுமாறு கூறினர். மேலும் தாத்தா, பாட்டி சென்று வந்த இடங்களை சுற்றி பார்த்து வருமாறு கேட்டு கொண்டனர். இதன் பின் அவர்களிடம் பல்வேறு அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்கப்பட்டன. முந்தைய தலைமுறையை நினைவு கூர்ந்தவர்கள் அதிக நினைவாற்றலுடனும், நம்பிக்கையுடனும் காணப்பபட்டனர். அவர்கள் 16க்கு 14 என்கிற வகையில் சரியான பதிலை அளித்தனர். இவ்வாறு முன்னோர் வழிபாடு செய்யாத மற்றொரு பிரிவினர் 16-க்கு 10 என்ற அளவிலேயே சரியான பதிலை அளித்தனர். இந்த ஆய்வு முடிவு ஆனது முன்னோர் வழிபாடு நன்மை தரும் என்ற நம்முடைய பழங்கால முறையை நிரூபிப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் கண்ணீர் அவர்களை பாதுகாக்கிறது: ஆராய்ச்சியில் தகவல்


பெண்கள் தங்களது அழுகையினால் காரியம் சாதிக்க கூடியவர்கள் என்று கூறப்படுவதுண்டு. ஒருவரின் காதலியோ அல்லது மனைவியோ அழும்போது அதனை அவரால் தாங்கி கொள்ள முடிவதில்லை. எவ்வளவு கல் நெஞ்சு படைத்தவராக இருந்தாலும் அவரையும் கரையச்செய்து விடும் பெண்களின் அழுகை. இதற்கு அறிவியல் ஆய்வின் அடிப்படையில் விளக்கம் பெறும்போது, பெண்களின் கண்ணீரில் ஒரு வித வேதிபொருள் காணப்படுகிறது. அது அவர்களை பார்க்கும்போது களையிழந்து காணப்படுவது போல் தோன்ற செய்கிறது. அழும் பெண்ணின் முகம் இந்த வேதிபொருளால் பொலிவு இழப்பதால் அவரது துணை அதனை பார்ப்பதற்கு விரும்புவதில்லை. மேலும் கண்ணீரில் காணப்படும் வேதிபொருள் அவர்களை மறைமுகமாக பாதுகாக்கிறது. எவ்வாறென்றால் அழுவதை பார்க்கும் ஆண்களில் வன்முறையை தூண்டும் டெஸ்டோஸ்டீரான் அளவை அது வெகுவாக குறைக்கிறது எனவும் ஆய்வு தெரிவிக்கிறது

பகலில் தூங்குவது நல்லது!

நீங்கள் பகலில் சற்று நேரம் குட்டித்தூக்கம் போடும் பழக்கம் உள்ளவரா? சங்கடத்தோடு `ஆமாம்’ என்று தலையசைக்காதீர்கள். நண்பகல் வேளையில் சிறிது நேரம் கண்ணயர்வது உடம்புக்கு நல்லது என்று ஜெர்மனி ஆராய்ச்சி யாளர்கள் இருவர் கண்டறிந்து கூறியுள்ளனர்.

ஜெர்மனியின் மாக்ஸ்பிளாங்க் உளவியல் அமைப்பைச் சேர்ந்த ஜுர்கன் சுல்லே, ஸ்காட் காம்பெல் ஆகிய இருவரும் மதிய உறக்கம் பற்றிக் கூறுகையில், இது நல்லது என்பதுடன், திறமையாக வேலை செய்யவும் உதவுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

அந்த விஞ்ஞானிகள் இதுபற்றி விரிவாக நடத்திய ஆய்வின் பலனாக அவர்களுக்கு ஐரோப்பிய தூக்க ஆராய்ச்சி சங்கத்தின் டபிள் ஆர் ஹெஸ் நினைவுப்பரிசு கிடைத்துள்ளது.

அந்த இரு ஆராய்ச்சியாளர்களும் பாதாள அறையில் பலரைத் தூங்கச் செய்து பல ஆண்டுகாலம் ஆய்வு நடத்தினர்.

பொதுவாக, ஓய்வுக் கட்டத்தில் மனித உடல் வெப்பநிலையானது சற்றுக் குறைகிறது. நடுப்பகல் வாக்கில் அந்த அளவுக்கு உடல் வெப்பநிலை குறைவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். வேறு விதமாகச் சொல்வது என்றால், மனித உடலின் இயல்பான அமைப்பானது பகல் உணவு வேளையில் சற்று நேரத்துக்குத் தானாக ஓய்வுக்குத் தயார் நிலையை அடைகிறது என்பது அவர்களின் கருத்து.

எனவே முடிந்தால் மதிய வேளையில் சிறிது `கோழித் தூக்கம்’ போட்டு வேலைத்திறனை அதிகரித்துக்கொள்வதுடன், மனஅழுத்தத்தையும் குறைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.