Advertisements

Category Archives: சுற்றுலா

பாங்காக் சுற்றுலா செல்ல 5 முக்கியமான காரணங்கள்!

உலக அளவில் சுற்றுலாப்பயணிகளை கவருவதில் பாங்காக் முதலிடத்தில் உள்ளது. இங்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

Continue reading →

Advertisements

சுற்றுலா போகலாம் வாரீங்களா!

‘வேறு வேலையே இல்லையா…’ என நினைத்து ஒதுக்கும் பல விஷயங்களில் ஒன்று, நிறைய இடங்களுக்கு பயணப்படுவது. அதாவது, வருடம் ஒரு முறையேனும் நம் அன்றாட வேலை, பிரச்னையிலிருந்து விலகி, வேறு இடம் சென்று, அந்த சூழ்நிலை, பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள விரும்புவது.
அதுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாது என்று சொல்வோர், இனியாவது, அவ்வப்போது இரண்டு, மூன்று நாட்களுக்கு, ஒரு சின்ன, ‘டூர்’ சென்று வருவது நல்லது. இது மாதிரி இரண்டு, மூன்று நாட்கள் என்றால், நம் குடும்ப உறுப்பினர்கள் அல்லாது பழகிய தோழமைகளோடு சென்றால் இன்னும் நல்லது.
அவ்வப்போது சுற்றுலா செல்ல நேரிடும்போது, ‘இன்று சுற்றுலா வந்துள்ளோம்… நம்முடன் இருப்பவர்களால் நமக்கு எந்த தொந்தரவும் வரப்போவதில்லை; சந்தோஷம் மட்டுமே…’ என, மனதளவில் சிந்தித்தாலே, பல மனக் கவலைகளுக்கு தீர்வு கிடைக்க வழி வகுக்கிறது.
நம் உறவுகளே நம்முடன் இது மாதிரி வரும்போது, நம் வழக்கமான உணவும், பேச்சும், வீட்டு பிரச்னையும் தான் முதன்மை பெறும். அதனால், அறிமுகமில்லாத பல பேர் கூடும் இந்த மாதிரி பயிற்சி வகுப்புகளை தவறவிடாதீர்கள். அவர்களின் பேச்சு, உணவு பழக்கம், உடை என எல்லாமே நமக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயத்தையும்; நமக்கு இது தேவையில்லை என்கிற மாதிரியான ஒரு தவறான பழக்கத்தையும் தெரிந்து கொள்ள உதவும்.

Continue reading →

போவோம் மலம்புழா அணை!

சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பி, ‘குளு குளு’ பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமா? பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்று வாருங்கள்.
கோவையிலிருந்து ஒன்றை மணி நேர பயணத்தில், மலம்புழாவை அடைந்து விடலாம். காரிலோ, டூ-வீலரிலோ செல்வதாக இருந்தால், கஞ்சிக்கோடிலிருந்து, ஏழரை கி.மீ., தூரத்தில் மலம்புழா வந்து விடும். கோவையிலிருந்து மிக சமீபத்திலிருக்கும் மலம்புழா, முன் தமிழகத்தோடு இணைந்திருந்தது.

Continue reading →

இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம்!

image

முற்றிலும் சுற்றுலாவை நம்பி உள்ள நாடு தாய்லாந்து. இந்தாண்டு, ஏப்ரலில் மட்டும், 1.65 கோடி சுற்றுலா பயணிகள், தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். தாய்லாந்து என்றாலே, பாங்காக், பட்டயா, புக்கெட் போன்ற இடங்களும், கூடவே மசாஜ் நிலையங்கள், இரவு நேர விடுதிகள், நம் நினைவிற்கு வரும்.
இந்த மூன்று நகரங்களுக்கு தான், அதிக அளவில் இந்தியர்கள் செல்கின்றனர். ஆனால், ஐரோப்பியர்கள், சிங்கப்பூர், மலேசியா, சீனாவை சேர்ந்தவர்கள், தாய்லாந்தில் அதிகம் தேர்வு செய்வது, கிராபி என்ற பகுதியை தான்.
கிராபி என்பது ஒரு மாகாணம். தாய்லாந்தின் தென்கோடியில், அந்தமான் கடலோரம் இருக்கிறது. கிராபி தான் தலைநகர். (நம்மூர் மதுரையை விட மிகச்சிறிய ஊர். ஆனால், சர்வதேச விமான நிலையம் இருக்கிறது). பாங்காக்கில் இருந்து, 800 கி.மீ., தூரத்தில் உள்ளது. புக்கெட்டில் இருந்தும், சாலை வழியாக இரண்டு மணி நேர பயணத்தில் கிராபியை அடையலாம்.
கிராபி மற்றும் அதன் அருகில், அந்தமான் கடலில் உள்ள குட்டி தீவுகள் என, குறைந்தது, மூன்று நாட்கள் சுற்றுலா சென்று கண்டுகளிக்க ஏராளமான இடங்கள் இங்குள்ளன.
இங்கு, "நிறைந்த தண்ணீரோடு’ பாய்கிறது கிராபி என்ற நதி. ஆற்றை, அழகாக வைத்திருப்பது எப்படி என்று இவர்களை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அத்தனை தெளிவான தண்ணீர். ஆற்றின் மறுகரையில் சதுப்பு நிலக் காடுகள். "நீண்ட வால் படகில்’ அரை மணி நேரம் பயணம் செய்தால், ஒரு சிறுகாடு. அதனுள், ஒரு உயர்ந்த சுண்ணாம்பு பாறை. அதில் ஏறிச் செல்ல, படிகள் உண்டு. பாறை குகைக்குள் சென்றால், கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் என்று, சில பகுதிகளை அடையாளப்படுத்தி வைத்துள்ளனர்.
கிட்டத்தட்ட, 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, மனித எலும்புக்கூடு இங்கு கண்டெடுக்கப்பட்டதாக, கல்வெட்டு வைத்திருக்கின்றனர். கற்கால மனிதர்களை போன்ற சிற்பங்கள் நம்மை மிரட்டுகின்றன. மேலே பார்த்தால், நம்மை குத்துவது போல நிற்கிற சுண்ணாம்பு பாறைகளின் கீற்றுகள். "செமதிரில்லான’ குகை இது.
ஆற்றில் உள்ள மிதக்கும் ஓட்டல்களில், அங்கேயே பிடித்த பெரிய மீன்களை, நண்டுகளை சுடச்சுட பொரித்து தருகின்றனர். ஒரு மீனை ஐந்து பேர் சாப்பிடலாம்; அவ்வளவு பெரியது. ஆற்றை கடந்து சென்றால், ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் குட்டி தீவு. வயல் வெளியும், தென்னை தோப்புகளுமாய், கேரளாவை ஞாபகப்படுத்து கிறது. தாய்லாந்தின் கைவினைப் பொருட்கள், மீன், இறால் ஊறுகாயை இங்கு வாங்கலாம்.
கிராபியில் உள்ள புத்தர் கோவில், புலிக்குகை போன்றவை பார்க்க வேண்டிய இடங்கள்.
குட்டித்தீவுகளில் படகு யாத்திரை: கிராபியில் இருந்து, 17 கி.மீ., தொலைவில் உள்ள நொப்பரடாரா என்ற படகு துறைக்கு, ரோடு வழியாக சென்று, அங்கிருந்து படகில் குட்டி தீவுகளுக்கு செல்லலாம். இந்த ஊருக்கு அருகிலேயே, ஆ நாங்க் என்ற கடற்கரை நகரம் உள்ளது. "தாய் மசாஜ்’ இங்கு பிரபலம்.
கொஞ்சம் கடல், கொஞ்சம் மணல் என, இயற்கை கொஞ்சும், "தண்ணீர் தேசம்’ இந்த தீவுகள். இயற்கை, அற்புதங்களை அள்ளி தெளித்திருக்கும், கண்ணிற்கு இதம் அளிக்கும் கோ சமுய், கோ பன்கன், கோ பி பி, கோ லன்டா, கோ லைபி, போடா என்ற குட்டி, குட்டி தீவுகள் தான் சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமி. உலக வரைபடத்தில் காணமுடியாத, தாய்லாந்து வரைபடத்தின், "சிறு புள்ளிகள்’ இவை. அலைகள் ஆர்ப்பரிக்காத, அமைதியான, தெளிவான நீலக்கடல் நீரில் குளித்து, களித்து, கவலைகளை மறந்து, வெள்ளை மணற்பரப்பில், "அவர்களது ஆடையில்’ ஓய்வெடுக்கின்றனர் ஐரோப்பியர்கள்.
நொப்பரடாராவில் இருந்து, கோ லன்டாவிற்கு மூன்று மணி நேர படகு பயணம். மதியம் 12:00 மணிக்கு படகின் மேற்பகுதியில் வந்து நின்றாலும், வெயில் சுடவில்லை. நடுக்கடலும், நம்மூர் ஏரி மாதிரி அமைதியாய் இருக்கிறது. அந்தமான் கடலின், "அமைதியே’ அழகு. கடலுக்கு இடையே, ஆங்காங்கே வழிமறிக்கின்றன, வானுயர்ந்து நிற்கும் பசுமை போர்த்திய சுண்ணாம்பு பாறைகள். எல்லா தீவுகளும் சராசரியாக, 6 கி.மீ., நீளம், 20 கி.மீ., அகலம் என்ற அளவில் தான் இருக்கின்றன. இடையிடையே நாம் ஓய்வெடுக்க, கடல் நடுவே மணற்பரப்புகள். அதில் இறங்கி நின்றால் நடுக்கடலில் நிற்கும் பிரமிப்பு. அந்த பகுதியில் ஆழம் குறைவாக இருப்பதால் குளிக்கலாம். அபூர்வ கடல் மீன்களை கண்குளிர கண்டு ரசிக்கலாம்.
மனித தலைகள் தெரியாத, மண்ணும், மரமும், கடலும் சூழ்ந்த சுற்றுச்சூழல் மாசு படாத, நீண்ட கடற்கரையை உடைய தீவு இது. படகில் சென்று இறங்கியதும், நபர் ஒன்றுக்கு, 10 பாத்(1 பாத்-தோராய மாக இந்திய மதிப்பில் 2 ரூபாய்) வசூலிக்கின்றனர். தீவை தூய்மையாக பாதுகாக்க, இந்த நுழைவு வரியை வாங்குகின்றனர். கட்டணம் வாங்குவதற்கு ஏற்ப, தூய்மையை காக்கின்றனர். கூடவே இலவசமாக, தீவு குறித்த, "பாக்கெட் கைடு’ தருகின்றனர்.
இங்கு வனத்திற்குள் சுற்றுலா (ஜங்கிள் சபாரி) சென்று அரிய பறவைகள், விலங்கினங்களை பார்க்கலாம்.
தேசிய பூங்கா, நீர்வீழ்ச்சி உள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஏற்ற இடங்கள் இவை. "சர்பிங்’ போன்ற தண்ணீர் விளையாட்டுகள் இங்கு பிரபலம்.
தனிமை விரும்பும், தேனிலவு தம்பதியர் தேடி வரவேண்டிய தீவு இது. வரலாற்று ஆய்வாளர்களை ஈர்க்க, சீன- தாய்லாந்து பண்பாடு இணைந்த, பழமையான, "மாதிரி கிராமம்’ ஒன்றை, பண்பாடு மாறாமல், அப்படியே வைத்துள்ளனர்.
இங்கிருந்து இரண்டு மணி நேர படகு பயணத்தில், ரெய்லே பீச்சிற்கு செல்லலாம். நம்மூர் கோவா, கோவளம் போன்று இங்கு, "சூரிய குளியல்’ பிரபலம்.
தாய்லாந்திற்கு எத்தனை சுற்றுலாப்பயணிகள் வந்தாலும், கடற்கரை, தெருக்கள் எல்லாம் தூய்மையாக, சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் இருக்கின்றன. மாதம் ஒரு முறை, "வீட்டிற்கு ஒருவர்’ எனத் தெருவிற்கு வந்து, ஓரிடத்தில் கூடி, "மாஸ்கிளீனிங்’ செய்கின்றனர். இதில், நகர மேயர், மாகாண கவர்னர் என விதிவிலக்கு இல்லாமல் பங்கேற்பது தான், "ஹைலைட்!’ என்னதான், "இயற்கையின் கொடை’ இருந்தாலும், கடல்சார்ந்த சுற்றுலாவில், தாய்லாந்து சாதிக்கும் ரகசியம் இது தான் போலும்.
"இந்தியாவில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே குறைந்த அளவில் வருகின்றனர். வந்தாலும் ஓரிரு நாட்கள் தங்கி சென்று விடுவர். தென்மாநிலத்தவர்கள் வருவது இல்லை; ஆனால், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் நாட்கணக்கில் இங்கு தங்கி பொழுதை போக்குகின்றனர்…’ என்றார் தாய்லாந்து சுற்றுலா அதிகாரி ஒருவர்.
நீங்களும் இனி, தாய்லாந்து சுற்றுலாவிற்கு திட்டமிட்டால், வழக்கமான இடங்களை தவிர்த்து, கிராபி சென்று, அருகில் உள்ள குட்டி தீவுகளில் கொட்டமடித்து வாருங்கள்.
***
எப்படி செல்வது: சென்னையில் இருந்து, ஏர் ஏசியா விமானத்தில் சென்றால், பாங்காக்கில் இருந்து கிராபிக்கு, "கனெக்டிங் பிளைட்’ உள்ளது. கிராபியில் இருந்து தீவுகளுக்கு, படகில் செல்லவும், ஏர் ஏசியா ஏற்பாடு செய்கிறது. விமானத்திற்கு புக்கிங் செய்யும் போதே, படகில் செல்லவும் முன்பதிவு வசதி உண்டு. (www.airasia.com)
உணவு: டீ, காபி, ஐஸ் டீ, பிரட், ஆம்லெட், அரிசி சோறு கிடைக்கும். மீன், இறால், நண்டு, சிப்பி வகைகள் பிரபலம். வெஜிட்டேரியன், "தாய் உணவுகள்’ சூப்பர் டேஸ்ட்.
விலை: டீ-30 பாத், இளநீர்-40, பீர்(500 மி.லி.,)-90, மதிய உணவுக்கு குறைந்தது 150 பாத் ஆகும்.
அறை வாடகை: ரிசார்ட்-2000 பாத் முதல், ஓட்டல்-600 பாத் முதல்
படகு கட்டணங்கள்: 100 பாத் முதல்
மசாஜ்: ரோட்டோர மசாஜ் நிலையங்களில் தாய் மசாஜ்-200, ஆயில் மசாஜ்-250
சீசன்: நவம்பர் முதல் ஏப்ரல் வரை.

மச்சு பிச்சு!

 

தென் அமெரிக்காவில் கஸ்கோ நகரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ளது மச்சு பிச்சு. கடல் மட்டத்துக்கு மேல் 2 ஆயிரம் மீட்டர் உயரத்தில் ஒரு மலையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் புராதன நகரம்.
இந்த நகரில் தோட்டங்கள், அடுக்கு மாடிகள், பெரிய பெரிய கட்டிடங்கள், அரண்மனைகள் உள்ளன. இந்த நகரில் தண்ணீர் செல்லும் கால்வாய்கள், நீரூற்றுகள், குளிக்கும் இடம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான படிக்கட்டுகள் மூலம் தோட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய கற்களில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரிய வெள்ளை பளிங்குப் பாறை உயரமான இடத்தில் எந்தப் பூச்சும் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது மச்சு பிச்சுவின் மிக அபூர்வமான காட்சி.

இயற்கை கோலமிடும் `கொல்லிமலை’

நாமக்கல் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது, கொல்லிமலை. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1500 மீட்டர் உயரம். மலை உச்சியில் இருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் பச்சைப்பசேல் காட்சி. காரவள்ளி என்ற இடத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, கொல்லிமலையின் உச்சிக்கு செல்ல வேண்டும். மரம், செடிகளுக்கு இடையே வாகனங்கள் ஊர்ந்து செல்லும் போது, ஜிலு,ஜிலு என வரும் இயற்கை காற்று தேகத்தை தழுவுவது ஆனந்த `ஜிலீர்’ அனுபவம்.

கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சிற்றருவி, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அரப்பளீஸ்வரர் கோவில், வியூபாயிண்ட் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் அற்புத பகுதிகள். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஏறத்தாழ 140 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி கொட்டியது போல தண்ணீர் கொட்டுகிறது. தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த குற்றாலம் அருவியில் கூட, சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் கொட்டும். ஆனால் இந்த அருவியில் மழைக்காலங்களில் அதிக அளவிலும், கோடைகாலங்களில் குறைந்த அளவிலுமாக ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.

இந்த அருவிக்கு அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து செங்குத்தான 1000 படிகளில் இறங்கி செல்ல வேண்டும். முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் செல்ல முடியாது என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அரப்பளீஸ்வரர் கோவில் அருகே உள்ள சிற்றருவியில் இவர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இங்கு நீராடும் சுற்றுலா பயணிகள், அரப்பளீஸ்வரரை தரிசித்து விட்டு, ஓய்வு எடுப்பதற்கு வசதியாக கோவில் முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் பகுதியாக வாடலூர்பட்டியில் உள்ள படகு இல்லம் திகழ்கிறது. இந்த படகு இல்லத்தில் ஏற்கனவே 4 படகுகள் இருந்தன. தற்போது ரூ.2 லட்சம் செலவில் மேலும் 3 புதிய படகுகள் வாங்கி, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து படகு சவாரி செய்யாமல் திரும்புவது இல்லை. மகளிர் சுயஉதவி குழு மூலம் இப்படகு இல்லம் பராமரிக்கப்படுவதால், மிக குறைவான கட்டணத்திலேயே சவாரி செய்ய முடிகிறது. அத்துடன் படகு இல்லத்தின் அருகே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவும் நிறுவப்பட்டு உள்ளது.

சுற்றுலா பயணிகள் மத்தியில் இங்குள்ள மாசில்லா அருவிக்கு பெரும் வரவேற்பு உண்டு. மாவட்ட நிர்வாகம் உடைமாற்றும் அறை, கழிப்பிட வசதி, காத்திருப்போர் அறை போன்றவைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த அருவியில் பெண்கள் ஆனந்தக்குளியல் போட்டபடி இருக்கிறார்கள்.

அரியூர் கிராமத்தில் இருந்து உற்பத்தியாகும் இந்த அருவி, ஏறத்தாழ 4 கி.மீ. தொலைவுக்கு மரம், செடிகளுக்கு இடையே ஊர்ந்து வந்து, 20 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. இயற்கை அழகுடன் கூடிய இந்த அருவியில் மூலிகை கலந்த தண்ணீர் கொட்டுவது பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. பிரசித்தி பெற்ற மாசிபெரியண்ணன் கோவில் அருகே இந்த அருவி அமைந்திருப்பதால் இதற்கு மாசில்லா அருவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத்தலம் கொல்லிமலை என்பதால், மாவட்ட நிர்வாகம் இதன் மேம்பாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இது பற்றி மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் சொல்கிறார்..

“தமிழக அரசு கொல்லிமலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டு பணிகளை செய்ய ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழக முதல்-அமைச்சர் கொல்லிமலையை சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக மாற்ற உத்தரவிட்டதின் பேரில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்காணிக்க அடிவார பகுதியில் புதிய சோதனை சாவடி ஒன்றையும் அமைத்து உள்ளோம். இதனால் பிளாஸ்டிக் பைகள் மூலம் கொல்லிமலையின் சுற்றுச்சூழல் மாசுபடுவது முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது.

கொல்லிமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாற்றுப்பாதை அமைக்கும் பணியும் தொடங்கி உள்ளது. இந்த பணி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.

***

14 நாடுகள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் கொல்லிமலையும் ஒன்று. இந்த ஒன்றியம் தற்போது தனி தாலுகாவாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி முற்காலத்தில் கொல்லிமலையை ஆட்சி செய்தார். அப்போது இருந்தே இந்த ஊராட்சிகள் அனைத்தும் நாடுகள் என அழைக்கப்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.

வல்வில் ஓரி மன்னனுக்கு அரசு சார்பில் செம்மேடு பஸ்நிலையம் அருகே சிலை அமைக்கப்பட்டு உள்ளது. குதிரையில் கையில் வாளை ஏந்தியவாறு மன்னன் காட்சி அளிக்கிறார். இவரது நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

***

கொத்துக் கொத்தாய் பலாப்பழம்

கொல்லிமலையின் அடிவார பகுதியான காரவள்ளியில் கொத்துக் கொத்தாக பலா காய்கள் காய்த்து தொங்குகின்றன. இது கொல்லிமலையின் இயற்கை அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பலாப்பழ சீசன் களைகட்டும். இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஊர் திரும்பும்போது பலாப் பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

***

நன்றி-தினத்தந்தி

காஷ்மீரின் அலங்காரப் படகு `ஷிகாரா’

காஷ்மீரை சேர்ந்த தாரிக் அகமது பட்லூ ஒரு பழைய, நைந்துபோன, கனமான விருந்தினர் புத்தகத்தை எடுத்து கனிவோடு புரட்டுகிறார். அதில் 1989-ம் வருடத்தில் படகு சவாரி செய்த பயணிகள் வியப்புடன் தங்கள் அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார்கள். அதை சிலிர்ப்போடு படித்துப்பார்க்கிறார், தாரிக். இவர் படகு வீடுகளின் உரிமையாளர் களில் ஒருவர்.

“23 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் படகு வீட்டுக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் தங்கள் கருத்துகளை இதில் எழுதியிருக் கிறார்கள். அவர்கள் வருகையெல்லாம் அப்பவே நின்னு போச்சு…” என்கிறார், ஸ்ரீநகர் தால் ஏரியில் மிதக்கும் தனது படகு வீட்டில் அமர்ந்திருக்கும் தாரிக். Continue reading →

படகுவீடு

பாரம்பரியமிக்க வீடு ஒன்று தண்ணீரில் கம்பீரமாக மிதப்பதுபோல் காட்சியளிக்கிறது, `படகுவீடு’! மெல்ல மெல்ல அது நகர்ந்து செல்லும்போது நகரத்து பரபரப்பு, பதற்றம், இரைச்சல், கவலை போன்றவைகளுக்கெல்லாம் விடைகொடுத்துவிட்டு அமைதியையும், ஆனந்தத்தையும் நோக்கி பயணிப்பதுபோல் இருக்கிறது.

இந்த வீட்டிலும் அழகான லிவிங் ரூம், டைல்ஸ் ஒட்டிய சுவருக்கு பின்னால் டைனிங் ஏரியா, பாத் அட்டாச் பெட் ரூம்கள், சமையல் அறை போன்றதெல்லாம் இருக்கின்றன. லிவிங் ரூம் தவிர இதர பகுதிகள் அனைத்தும் ஏ.சி. செய்யப்பட்டிருக்கிறது.

மெதுவாக படகு வீடு பயணிக்கிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர். ஆலப்புழா ஆர்யநாடு படகுதுறையில் இருந்து வேம்பநாடு காயலில் பயணம் செய்யும் படகு இடது புறமாகத் திரும்பினால் குமரகம்-தண்ணீர்மூக்கு பகுதி வரும். வலது பக்கத்தில் புன்னமடை- அம்பலபுழா வருகிறது.

படகு வீடு பயணத்தில் வெளிநாட்டு பயணிகள் ஆர்வமுடன் பங்குபெறுகிறார்கள். எந்த ஒரு இயற்கை காட்சியையும் தவற விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் கேமிராவும் கையுமாக காட்சி அளிக்கிறார்கள். தங்கள் கண்களில் சிக்கும் காட்சிகளை எல்லாம் தத்ரூபமாக படம்பிடித்துதள்ளுகிறார்கள். வெளியே இருந்து பார்க்கும்போது எல்லா படகுவீடுகளும் ஒரே மாதிரி தெரிந்தாலும், ஒன்றுக்கொன்று வித்தியாசமாகத்தான் வடி வமைக்கப்பட்டுள்ளது.

இந்த படகுகளில் உள்ள என்ஜின்களில் இரண்டு `கியர்கள்’ இடம்பெற்றிருக்கின்றன. முன்னோக்கி செல்லவும், பின்னோக்கி செல்லவும் இதனை பயன்படுத்துகிறார்கள். படகு வீடுகள் பெரிதாக இருப்பதால் வேகமாக சென்று திடீரென்று திருப்ப முடியாது. எனவே தண்ணீர் பரப்பிலே பாதையை உருவாக்கியிருக்கிறார்கள். கொச்சி முதல் கொல்லம் வரை அந்த பாதை நீளுகிறது. சிவப்பு நிற `பில்லர்’ போன்று அந்த பாதை தெரிகிறது. இரவில் அதில் விளக்குகள் எரிகின்றன.

இதில் பயணிக்கும்போது கரை ஓர இயற்கை காட்சிகளை கண் நிறைய அள்ளிக் கொண்டே செல்லலாம். பெண்கள் நீச்சலடித்து குளித்துக்கொண்டிருப்பார்கள். கட்டுமரங் களில் மீன் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அவைகளை எல்லாம் பார்த்தபடியே, கேரளாவின் கிராமங்களையும், அங்குள்ள மக்களையும் பார்த்துக்கொண்டே செல்லலாம். இதன் அழகால் கவரப்பட்ட வெளிநாட்டினர் சிலர் ஒரு மாதம் முழுக்க படகுவீட்டிலே தங்கி காயல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படகுவீடு இப்போது பிரபலம் ஆகிவிட்டதால் அந்த பகுதிகளில் தொழில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. ஹோம் ஸ்டே, போட்டிங், ஹோட்டல்கள், வீட்டு உணவு, மீன் வியாபாரம் போன்றவை எல்லாம் சூடு பிடித்துவிட்டது. அந்த காயல் பகுதிகளில் கட்டுமரத்தில் `மீன்.. மீன்’ என்று கூவிக்கொண்டே, மீன் வியாபாரிகள் செல்கிறார்கள். ஆனால் பெரும் பாலானவர்கள் மீன் வாங்குவதில்லை. அவர்கள் வீட்டில் மீன் குழம்பிற்குரிய மசாலாவை அரைத்துவைத்துக்கொண்டு தூண்டிலோடு காயலுக்கு வந்துவிடுகிறார்கள். தூண்டில் போட்டு மீன் பிடித்துச் சென்று வீட்டிலே குழம்பு வைத்துவிடுகிறார்கள்.

படகு வீடு சென்று கொண்டிருக்கும்போதே, உள்ளே சூப்பரான மீன் உணவு தயாராகிறது. அழகான சமையல் அறையில், சமையல் செய்யவும் அதிக வசதி இருக்கிறது. வேகமாக சென்றால் சமையல் வேலை பாதிக்கும் என்பதால் மிதமான வேகத்திலே வீடு மிதந்து போகிறது.

போகும் வழியில் இருக்கும் கரை ஓர பகுதிகளை பார்க்க வசதியாக படகுகளை நிறுத்துகிறார்கள். இறங்கிச் சென்று பார்த்துவிட்டு மீண்டும் படகுகளில் ஏறிக்கொள்ளலாம். மதிய உணவாக அங்கேயே தயாரித்த பலவிதமான மீன் உணவுகள், வாத்துக் கறி போன்றவைகளை சுடச்சுட பரிமாறுகிறார்கள். உண்ட மயக்கத்தில் யாரும் படகு வீட்டில் தூங்குவதில்லை. முழுமையாக அவர்கள் விழித்திருந்து, அந்த பயண அனுபவத்தை பெறவே விரும்புகிறார்கள்.

வெளிநாட்டு பயணிகளை பொறுத்தவரையில் அவர்களுக்கு இன்னொரு `சவுகரியம்` இருக்கிறது. நியூசிலாந்தில் இருந்து ஐரோமி என்ற இளைஞர் தனியாக சுற்றுப்பயணம் வந்திருக்கிறார். அதுபோல் கொரியாவில் இருந்து குவான்சின் என்ற பெண்ணும் வந்திருக் கிறார். இருவரும் படகு வீட்டு பயணத்தில் பார்த்து, பேசி நெருங்கிவிட்டார்கள். அப்புறம் என்ன அவர்கள் பயணம் `ரொம்ப ரொம்ப’ ஜாலியாகிவிட்டது.

இரவு நேரம் மிக அற்புதமான அனுபவமாகிவிடுகிறது. எல்லா படகு வீடுகளிலும் விளக்கு கள் எரிகின்றன. அப்போது லேசாக மழை பெய்தால் அந்த அனுபவம் இன்னும் புதுமை யாக இருக்கும். ஆனால் பலத்த மழை என்றால் பயணத்திற்கு தடை ஏற்பட்டுவிடும். தண்ணீர் அளவு அதிகரிக்கும். அப்போது படகுவீடு மிதந்து செல்லும் தண்ணீர் சுழற்சியால் கரை ஓரங்களில் இருக்கும் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிடும். அதனால் படகு வீடு போக்குவரத்தை நிறுத்திவிடுவார்கள். இந்த படகு வீடுகளில் காலை நேரத்திற்கு மட்டும் என்றும், இரவு வரை என்றும் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

அமைதியான நதி‌யினிலே…குமரகம்.

ஆடி முடிந்தது. ஆவணி பிறந்தது. மனம் சிறகடிக்க திருமணம் முடிந்தது. அடுத்தது என்ன? தேன்நிலவு தான். எங்கே போவது? அருகிலேயே கடவுளின் தேசம் இருக்க குழப்பம் ஏன்? குமரகம். இங்கு குதூகலத்திற்கு அளவே இல்லை. இயற்கை அன்னை தன் செல்வங்களை எல்லாம் வாரி, வாரி இந்த குமரகத்திற்கு தானமாக கொடுத்து விட்டாளோ! என்ற எண்ணம் அங்கு சென்றதும் நிச்சயம் ஏற்படும். திரும்பிய இடமெல்லாம், நிலமங்கை பசுமை போர்வை போர்த்தி இருக்கிறாள். ஒரு புறம் செழித்து வளர்ந்த நெற்கதிர்களுடன் காணப்படும் வயல்கள்… மறுபுறம், குலைகுலையாக இளநீர்களை சுமந்து நிற்கும் தென்னை மரங்களை கொண்ட தோப்புகள்… இவைகளுக்கு இடையே, மழை வளத்தால் தேங்கி நிற்கும் குட்டைகளில் பூத்திருக்கும் அல்லி மலர்கள்… உல்லங்கழிகள், அதில் மிதந்து செல்லும் கட்டுமரங்கள்…என்று பூலோக சொர்க்கமாக காண்போரின் கண்களையும், கருத்தையும் கவர்கிறது குமரகம். இதனால் தானோ என்னவோ, நேஷனல் ஜியோகிராபிக் குழுவை சேர்ந்த பயணி ஒருவர் இந்த குமரகத்தினை, உலகின் பத்து அழகிய இடங்களில் ஒன்றாக கணித்திருக்கிறார்.

கொச்சியில் இருந்து கார் மூலமாக பயணித்தால் 90 கி.மீ. தூரம். அதுவே கோட்டயத்தில் இருந்து என்றால் 16 கி.மீ. பயணம் தான். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த இடம் கொடியூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இங்கு குமரக் கடவுளின் கோவில் ஒன்றை கட்டியிருக்கிறார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்ற மத பேதம் இன்றி அனைவரும் வழிபடும் குமரன் வாசம் செய்யும் இடமானதால் குமரகம் என்ற பெயர் பெற்றிருக்கிறது இவ்விடம்.

குமரகத்தை தன்னுள் அரவணைத்து வைத்திருக்கிறது வேம்பநாடு ஏரி. இந்தியாவிலேயே நல்ல தண்ணீரை கொண்ட மிகப்பெரிய ஏரி இது தானாம். இதன் பரப்பளவு 205 சதுர மீட்டர். பம்பா, மீனசில், மணிமாலா. அச்சன்கோவில், பெரியார், மூவாட்டு புழா எனும் ஆறு ஆறுகளின் சங்கமமே இந்த வேம்பநாடு ஏரி என்ற செய்தி மலைக்க வைக்கிறது. பல திசைகளிலிருந்து ஓடிவரும் இந்த தண்ணீர், அழகிய கால்வாய்களாக உருவெடுத்து பின் இந்த ஏரியில் கலக்கிறது. இந்த கால்வாய்களில் படகு சவாரி செய்து மகிழலாம். கால்வாயில் கரைகளில் குமரகத்தை சேர்ந்த விவசாயிகள் வீடு கட்டி வாழ்கிறார்கள். வீடுகளில் இருந்து படி இறங்கினாலே தண்ணீர் தான். வாழ்நாளில் மறக்க முடியாத சுக அனுபவம் இது.

மீன்கள் நிறைந்து காணப்படும் இந்த ஏரியில்… மழைக்காலமான ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தண்ணீர் உப்பு தன்னையில்லாமல் இருக்குமாம். இந்த ஏரியை சுற்றியுள்ள சதுப்பு நில மரங்களில், பல நாடுகளில் இருந்து வந்த பறவைகள் கூடு கட்டி வாழ் கின்றன. இந்த பறவைகள் சரணாலயத்தை கேரள சுற்றுலாத்துறை பராமரிக்கிறது. குமரகத்தில் வாழ்பவர்கள், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்ல படகுகளை உபயோகிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டில் முன்னும் கார், ஸ்கூட்டர் நிறுத்துவது போல அவர்களுடைய சொந்தப் படகுகளை நிறுத்தி வைக்கின்றனர். இதை பார்த்தால் நமக்கு வெனீஸ் நாடு நினைவுக்கு வரும். குமரகத்தை தென்னிந்தியாவின் வெனீஸ் என்று அழைத்தால் கூட அது மிகையாகாது.

அரபிக்கடவுள் உருவாகியிருக்கும் உப்பங்கழிகளின் கரைகளின் பல சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்களின் உணவு வகைகள் அற்புதமானவை. சுவை நிறைந்தவை. இங்கு பல விதமான ஆயுர்வேத மசாஜ்களும் செய்கிறார்கள். மாலை நேரத்தில் ஹோட்டல்களில் இருந்து, படகுகளில் நம்மை அழைத்து சென்று சூரிய அஸ்தமானத்தை காட்டுகிறார்கள். சிலுசிலு காற்று முகத்தில் அறைய… அந்த மாலை நேர வானத்தில் , சிறகு பூரித்து கூடு திரும்பும் பறவைகளின் காட்சியை பார்க்கும் பொழுது, இனம் புரியாத இன்பத்தில் மனம் நிறைகிறது.

படகு வீடுகளில் தங்கி மகிழ நாம் காஷ்மீர் செல்ல வேண்டியதில்லை. இங்குள்ள ஹோட்டல்களுக்கு சொந்தமான கெட்டுவலம் என்றழைக்கப்படும் சொகுசு படகுகளில் தங்கினாலே போதும். பழமையும் புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படகுகளில் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்க கூடிய எல்லா வசதிகளுகளும் இருக்கின்றன.

இயற்கை விரும்பிகளுக்கு…. குறிப்பாக தேனிலவு தம்பதியர்களுக்கு சொர்க்க பூமி இந்த குமரகம்.

பாலைவன மஞ்சள் ரோஜா-ஜெய்சால்மர் கோட்டை

மன்னராட்சி மாய்ந்துவிட்டது. மகுடங்கள் சாய்ந்து விட்டன. மக்களாட்சி வீறுகொண்டு நடக்கிறது என்கிற காலகட்டம் இது. ஆனாலும், கற்சுவர்களால் கைகோர்த்து, கோட்டை என்று பெயர் பெற்று, மன்னர்களையும் அவர்தம் வம்சாவளிகளையும், மக்களையும் காத்து இன்றளவும் அழியாமல் தலைநிமிர்ந்து நிற்கின்ற கோட்டைகள், இந்த பாரததேசம் முழுவதும் ஆங்காங்கே நிலை கொண்டு, மன்னராட்சியை நினைவூட்டுகின்றன. அப்படி உயிர்ப்போடு இருக்கும் கோட்டையை கண்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சால்மர் கோட்டைக்கு ஒருமுறை போய் வாருங்கள். அந்த கோட்டைக்குள் இன்றளவும் மக்கள் இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

தார் பாலைவனத்தின் மத்தியில், திரிகுடா குன்றின் தலையில் சூட்டப்பட்ட கிரீடம் போல், தரையிலிருந்து முப்பது மீட்டர் உயரத்தில், விஸ்வரூப தரிசனம் தருகிறது ஜெய்சால்வர் கோட்டை. மஞ்சள் நிற மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டை, பகல் நேரத்தில் சூரியக் கதிர்களால் தங்கம் போல் ஜொலிக்கிறது. இதனால் தங்கக்கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பெயரிலேயே, இந்த கோட்டையின் சரித்திரத்தை மையமாக வைத்து தான் எழுதிய நாவலை படமாக்கியிருக்கிறார் சத்யஜித் ரே.

ஜெய்சால்மர் கோட்டையை 1156ல், பகதிராஜபுத்திர வம்சத்தை சார்ந்த அரசர் ஜெய்சால் என்பவர் கட்டியிருக்கிறார். இதை கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆனதாம். போர்க்காலங்களில் பகைவர்களின் தாக்குதலை சமாளிக்கும்படி 3 பாதுகாப்பு சுவர்களை கொண்டிருக்கிறது இந்த காவல் கோட்டை.

கோட்டையின் உட்பகுதி. இங்கே ஒரு இந்தியனின் சராசரி வாழ்க்கை அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடிக் கொண்டிதருக்கும் மனிதர்கள், தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கும் வியாபாரி, சீருடை அணிந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், உல்லாச நடைபோடும் வெளிநாட்டுப் பயணிகள், அவர்களுக்காக திறக்கப்பட்டு இருக்கும் பிரெஞ்சு, இத்தாலிய உணவகங்கள், விரையும் வாகனங்கள், பால் கேன்களை தூக்கிசெல்லும் பால் விற்பவர்கள் என மன்னர்கள் காலத்தில் இங்கே வாழ்ந்த மக்களின் வம்சாவளிகள் இன்றுவரை இடம் பெயராமல் வாழ்கிறார்கள். மக்கள் தொகை அதிகமானதால், கோட்டையின் வெளியே உள்ள இடங்களை சுற்றியும் குடியேறி இருக்கிறார்கள்.

பச்சை பசேல் என பரந்திருக்கும் தோட்டங்கள். அதன் நடுவே அழகிய பூக்களை தாங்கி நிற்கும் செடிகள். பின்னணியில், மனதை சுண்டி இழுக்கும் “ராஜ்மஹால்’ அரண்மனை! அரண்மனையின் ஏழுமாடி கட்டிடம் அருங்காட்சியமாக ஆக்கப்பட்டிருக்கிறது. மகாராணிகளின் விலை உயர்ந்த ஆடைகள், போர்க்கால ஆயுதங்கள், சமைக்க உபயோகப்படுத்திய பாத்திரங்கள் என்று வகைப்படுத்தி, இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்ட அரண்மனையின் கதவுகள், ஜன்னல்கள், முற்றங்கள், ஓவியங்கள் என அழகு மிளிரும் அத்தனையும்… மாடிப்படிகளில் ஏறிவந்த தேக அசதியை விரட்டி விடுகின்றன. ஒவ்வொரு மாடியிலிருக்கும் ஜன்னல்கள் வழியாக ஜெய்சால்மர் நகரத்தின் அழகை கண்டு ரசிக்கலாம்.

ஜெய்சால்மர் கோட்டையின் உள்ளே 15, 16 நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட ஏழு சமணக் கோவில்கள் உள்ளன. இவை தவிர, இங்கிருக்கும் இந்துக்களின் கோவிலான லஷ்மிநாத் புகழ்பெற்றது. 1494ல் கட்டப்பட்ட இக்கோவிலில் இருக்கும் லஷ்மி விக்கிரகத்தின் பேரழகு, பார்ப்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

ஜெய்சால்மரில் அளவில்லா செல்வங்களை வியாபாரத்தின் மூலம் ஈட்டி, வியாபாரிகள் கட்டிய வீடுகளை ஹவேலிகள் என்று அழைக்கிறார்கள். மிக நேர்த்தியான, நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடி இந்த கட்டிடங்களின் வயது பல நூறு ஆண்டுகள், எண்ணற்ற அறைகள், அலங்கார வளைவுகள், எழில் கொஞ்சும் கதவுகள், ஜன்னல்கள் என சுற்றி சுழலும் நம் கண்கள், படைத்தவனுக்கு பரவசமாய் நன்றி சொல்வது நிச்சயம். இந்த வீடுகளில் சில, அருங்காட்சியமாக ஆக்கப்பட்டுள்ளன. பலவற்றில், அதன் உரிமையாளர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில்…. வியாஸ் ஹவேலி, ஸ்ரீநாத் பேலஸ் போன்றவை நாம் கட்டாயமாக பார்க்க வேண்டியவை.

வெயில் மயங்கும் மாலை நேரம். கோட்டையிலிருந்து வெளிவந்து திரும்பி பார்க்கையில் பாலைவனத்தில் பூத்த மஞ்சள் ரோஜாவாக ஜெய்சால்மரின் அழகு மனதில் நிறையும்.

எப்போது போகலாம்?

அக்டோபர் முதல் மார்ச் வரையிலின மாதங்கள் ஜெய்சால்மர் பயணத்திற்கு உகந்தவை.

எப்படி போகலாம்?

ஜோத்பூர் வரை விமானம் அல்லது ரயில் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ஜெய்சால்மர் செல்லலாம்.

உதவிக்கு

ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் போன்: 02992 252406