Category Archives: விளையாட்டு செய்திகள்

சச்சின் ஆல்பம்!

முப்பது வயதைத் தாண்டிவிட்டாலே கிரிக்கெட் வீரர்கள் `ஓய்வை’ப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார் கள். ஆனால் 37 வயதில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார் சச்சின் தெண்டுல்கர்.

அவரது வாழ்வின் சில நிகழ்வுகள் இங்கே படங்களாய்…

சச்சின் டெஸ்ட் சாதனைகள்
அதிக ரன்கள் குவித்தவர்- 14,513 (சராசரி 56.91)

டெஸ்ட் விளையாடும் 7 நாடுகளுக்கு எதிராக தலா ஆயிரம் ரன்களுக்கு அதிகம் சேர்த்தவர்

12 ஆயிரம் ரன்களை கடந்த 3 வீரர்களுள் ஒருவர். இச்சாதனை புரிந்த முதல் இந்தியர்

6 சீசன்களில் 1000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் குவித்தவர்- 1997 (ஆயிரம் ரன்கள்), 1999 (1,088) 2001 (1,003), 2002 (1,392), 2008 (1,063), 2010 (1,543)

அதிகமுறை 150, அதற்கு மேல் குவித்தவர்- 20

6 இரட்டைச் சதங்கள் அடித்தவர்

இந்திய அளவில் கேப்டனாக ஒரு போட்டியில் அதிக ரன் குவித்தவர் (1999- 2000-ல் நிசிலாந்துக்கு எதிராக 217)

டெஸ்ட் போட்டி விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதம் அடித்தவர்

வெளிநாடுகளில் அதிக ரன் சேர்த்தவர்- 7,966

அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்- 175

`மாஸ்ட்ரோ’ தகவல்கள் * இடது- வலது கை பழக்கம் (`ஆம்பிடெக்ட்ரஸ்’) உடையவர் சச்சின் தெண்டுல்கர். வலது கையால் பேட்டிங் செய்யும் சச்சின், சாப்பிடுவது, `ஆட்டோகிராப்’ போடுவது எல்லாம் இடது கையால்.

* மூன்றாவது நடுவரால் `ரன் அவுட்’ என்று அறிவிக்கப்பட்ட முதல் வீரர், சச்சின் தெண்டுல்கர். தென் ஆப்பிரிக்காவில் அந்நாட்டு அணிக்கு எதிராக 1992-ல்.

* சாப்பாட்டுப் பிரியரான சச்சின், நல்ல சமையல்காரரும் கூட. ஒரு முறை தனது சக வீரர்கள் அனைவருக்கும் சமைத்துக் கொடுத்து அசத்தினார்.

* சிறுவயதில் சச்சின் ஒரு சண்டைக்காரர் என்கிறார்கள் அவரது நண்பர்கள். யாராவது ஒரு புதிய பையனைப் பற்றிக் கேள்விப்பட்டால், `அவனால் என்னை அடிக்க முடியுமா?’ என்று கேட்பாராம் சச்சின். மதிய இடைவேளை நேரங்களில் பலமுறை சச்சின் சண்டையிடுவதைப் பார்க்க முடியும் என்று அவரது இள வயதுத் தோழர்கள் கூறுகின்றனர்.

`விளம்பர ராஜா’ டோனி!

தொலைக்காட்சியில் அதிகமான விளம்பரங்களில் தோன்றும் பிரபலங்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோனி.

சர்வதேச பிரபலங்கள் சச்சின் தெண்டுல்கர், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் ஆகியோரையே டோனி பின்னுக்குத் தள்ளிவிட்டார் என்பது ஆச்சரியச் செய்தி.

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 24 நிறுவனங்களுக்கு தொலைக்காட்சி விளம்பரத்தில் `பளீரிட்டிருக்கிறார்’ டோனி. அதேநேரம் ஷாருக்கான் 16 பிராண்ட்களுக்கான விளம்பரங்களிலும், சச்சின் 15 பிராண்ட்களுக்கான விளம்பரங்களிலும் தோன்றியிருக்கின்றனர். ஊடக ஆய்வு ஒன்றில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சச்சின், ஷாருக்கானை மட்டுமல்ல, மேலும் பல பாலிவுட் அழகுத் தாரகைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டார் டோனி. பிரபலங்கள் தோன்றும் விளம்பரங்களில் இந்த முன்னணி நடிகைகள் மட்டும் 45 சதவீதப் பங்கை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் டி.வி. பிரியராக இருந்தால், கரீனா கபூர், சோனம் கபூர், கஜோல், ஐஸ்வர்யா ராய் ஆகியோரே சின்ன திரையில் அடிக்கடி புன்னகைக்கும் அழகு நட்சத்திரங்கள் என்று அறிந்திருப்பீர்கள்.

முன்பு குறிப்பிட்ட ஆய்வின்படி, பிரபலங்கள் தோன்றும் டி.வி. விளம்பரங்களில் இந்தி நடிகர், நடிகையர் 42 சதவீதத்தையும், விளையாட்டு நட்சத்திரங்கள் 10 சதவீப் பங்கையும் வகிக்கின்றனர்.

தனது நீண்ட விளம்பரப் பட்டியலை இரண்டாண்டு காலத்துக்கு நிர்வகிப்பதற்கு `ரிதி ஸ்போர்ட்ஸ் மானேஜ்மென்ட் அண்ட் மைண்ட்ஸ்கேப்ஸ்’ என்ற நிறுவனத்துடன் கடந்த ஜூலையில் 210 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் டோனி.

இந்திய விளையாட்டுலக வரலாற்றிலேயே இது ஒரு புதிய சாதனை. 2006-ம் ஆண்டில் `ஐகானிக்ஸ்’ என்ற நிறுவனத்துடன் சச்சின் தெண்டுல்கர் மூன்றாண்டு காலத்துக்கு ரூ. 180 கோடிக்கு ஒப்பந்தம் போட்டதே இதற்கு முன் அதிகபட்சமாக இருந்தது.

டோனி, கிரிக்கெட் களத்தில் நாயகனாகத் திகழும் வரை, அவரை விளம்பர உலகிலும் யாரும் அசைக்க முடியாது என்பது உறுதி!

காமன்வெல்த் பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 2 வது இடம் : இங்கிலாந்து 3 வது இடம்

காமன்வெல்த்  போட்டியில் 101 பதக்கம் பெற்று இந்திய அணி பதக்க பட்டியலில் 2 வது இடத்தை பிடித்தது, இன்றைய பாட்மின்டன் போட்டியில் செய்னா 38 வது தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார், முன்னதாக நடந்த பாட்மின்டன் இரட்டையர் பிரிவிலும் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு ஒரு தங்கம் கிடைத்தது. இந்தியா கடந்த முறை 2006 ல் 4 வது இடத்தில் இருந்தது குறிப்பிடதக்ககது.

இன்று (14 ம் தேதி ) மதிய நேரப்படி  37 தங்கம் பெற்று இருந்தது. பதக்க பட்டியலில் இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ள  யார் கூடுதல் தங்கம் பெறுவார்கள என்ற எதிர்பார்ப்பு இருந்த நேரத்தில் பாட்மின்டன் ஒற்றையர் போட்டியில் செய்னா வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றார். இதனையடுத்து இந்தியா  38 தங்க பதக்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கம் பெற்று பதக்க பட்டியலில் 2 வது இடத்தை பிடித்தது.  ஆஸ்திரேலியா 74 தங்கம், 55, வெள்ளி, 48 வெண்கலம் பெற்று மொத்தம் 177 பதக்கம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.  இங்கிலாந்து 37 தங்கம் , 59 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம்142 பதக்கம்  பெற்று  3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த கால பட்டியல் ஓர் ஆய்வு : ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் ( 2006 ம் ஆண்டு ) நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்கள் பெற்று 4 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கடந்த காலத்தை விட 51 பதக்கங்கள் கூடுதலாக பெற்றுள்ளது இந்தியா. கடந்த 2006 ல் ஆஸ்திரேலியா 84 தங்கம், 69 வெள்ளி, 68 வெண்கலம் என 221 பதக்கம் பெற்று முதல் இடத்தில் இருந்தது. தற்போதைய டில்லி போட்டியில் ஆஸ்திரேலியா 74 தங்கம், 54 , வெண்கலம், 48 வெள்ளி என மொத்தம் 176 பதக்கம் பெற்று முதல் இடத்தில் இருந்தாலும் கடந்த ஆண்டை விட ஆஸ்திரேலியா சற்று பின் தங்கி இருக்கிறது. என்பது உண்மை .

இரண்டாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து கடந்த கால போட்டியில் (36 தங்கம், 40 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 110 பதக்கம்) பெற்றது. இந்த ஆண்டில் இங்கிலாந்து தங்கம் மட்டும குறைந்து விட்டதால் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 37, 59 , 46 என 142 பதக்கம் பெற்று 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2006 போட்டியில் 3 வது இடத்தில் இருந்த கனடா ( மொத்தம் 86 பதக்கம் ) தற்போது 26 தங்கம், 17 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 75 பதக்கம் பெற்று 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 5 வது இடத்தில் இருந்த தென் ஆப்ரிக்கா ( கடந்த போட்டி ; 38 பதக்கம்) , தற்போது 12 தங்கம் 11 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கம் பெற்று 5 வது இடத்தை மீண்டும் தக்கவைத்துக்கொண்டது.

நேற்று நடந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் பைனலில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், சுபாஜித் சகா ஜோடி, சிங்கப்பூரின் நிங் கயோ, ஜி யங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியின் முதல் செட்டை சிங்கப்பூர் ஜோடி 11-9 என கைப்பற்றியது. பின்னர் எழுச்சி கண்ட இந்திய ஜோடி அடுத்த இரண்டு செட்டை 12-10, 11-4 என தன்வசப்படுத்தியது. இதற்கு சிங்கப்பூர் ஜோடி 11-5 என 4வது செட்டில் பதிலடி கொடுத்தது. இதனால் போட்டி 2-2 என சமநிலை அடைந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 11-8 என கைப்பற்றியது. இறுதியில் சரத்-சகா ஜோடி 9-11, 12-10, 11-4, 5-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றது.

மனோஜ் தங்கம்:ஆண்களுக்கான “லைட் வெல்டர் வெயிட்’ 64 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் மனோஜ் குமார், இங்கிலாந்தின் பிராட்லி சவுண்டர்சை எதிர்கொண்டார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மனோஜ் குமார் 11-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.

சுரன்ஜாய் அதிர்ஷ்டம்:ஆண்களுக்கான “பிளை வெயிட்’ 52 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சுரன்ஜாய் சிங், கென்யாவின் பென்சன் ஜங்கிரு மோதுவதாக இருந்தது. ஆனால் கென்ய வீரர் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காததால், சுரன்ஜாய் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

சமோதா அபாரம்:ஆண்களுக்கான “சூப்பர் ஹெவி வெயிட்’ +91 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் பரம்ஜித் சமோதா, டிரினிடாட் டுபாகோவின் அப்துலை சந்தித்தார். இதில் சமோதா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். இதன்மூலம் குத்துச்சண்டை போட்டியில் 3 தங்கப் பதக்கம் கிடைத்தது.

நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சரத் கமல் மற்றும் சுபாஜித் சகா ஜோடி இணைந்து இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்தது. குத்துச்சண்டையில் மனோஜ் குமார், சுரன்ஜாய் சிங், பரம்ஜித் சமோதா ஆகிய 3 இந்திய வீரர்கள் தங்கம் வென்று, சாதித்தனர்.

அகாசியின் கேசம் நிஜமானதல்ல!


முன்னாள் சாம்பியன் டென்னிஸ் வீரர் ஆந்ரே அகாசி, தான் போதைப்பொருள் பயன்படுத்தியது உண்டு என்று சமீபத்தில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் மனம் திறந்திருக்கும் மற்றொரு விஷயம், தனது `கேசம்’ பற்றிய விஷயம்.

தான் 1990-களில் `வைத்திருந்த’ சிங்கப் பிடரி பாணி கேசம் உண்மையில் ஒரு `டோப்பா’ என்ற உண்மையைத் தெரிவித்திருக்கிறார் அகாசி.

அவர் எழுதியிருக்கும் சுயசரிதையின் சில பகுதிகள் இங்கிலாந்து பத்திரிகைகளில் அண்மையில் வெளிவந்திருக்கின்றன. அதில் மேற்கண்ட விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியின்போது தன் தலைமுடியுடன் கூடுதலாகக் கொஞ்சம் முடியை `பின்’னைக் கொண்டு சேர்த்திருந்ததாக எழுதியுள்ளார் அகாசி. அது 1990-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டி. அப்போட்டியில் தான் தோற்றதற்கு தலைமுடியைப் பற்றிய தனது கவலையும் ஒரு காரணம் என்று அகாசி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அந்தப் போட்டிக்கு முன்னதாக வெற்றிக்காக அல்லாமல், போட்டியின்போது தலைமுடி கீழே விழுந்துவிடக் கூடாது என்றே தான் பிரார்த்தித்ததாகக் கூறுகிறார் அகாசி.

தனது தலைமுடி இழப்பைச் சரிகட்டும் விதமாக `டோப்பா’ அணியத் தொடங்கியதாகத் தெரிவிக்கும் அகாசி, “ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும் நான் எனது வேறொரு அடையாளத்தைக் காண்பேன். முகம் பார்க்கும் கண்ணாடி… அங்கு இங்கு என்று. அப்போது என்னை நானே கேட்டுக்கொள்வேன். நீ ஒரு `டோப்பா’வை அணிய வேண்டுமா? அதிலும் டென்னிஸ் களத்தில்?’ என்று. அதற்கு நானே, `வேறு என்ன செய்வது?’ பதில் கேள்வியும் கேட்பேன்.

பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முந்தைய நாள் இரவு அகாசி `டோப்பா’வுடன் குளிக்க, அது சிதைய ஆரம்பித்தது. சிக்கலும் தொடங்கியது. அது குறித்து, “அனேகமாக நான் அப்போது `டோப்பா’வை தவறாக அலசியிருக்கலாம்” என்கிறார் அகாசி.

அந்த நேரத்தில் பயந்துபோன அவர், தனது சகோதரர் பில்லியை அறைக்கு அழைத்தார். இருவரும் சேர்ந்து `டோப்பா’வை `கிளிப்’கள், `பின்கள்’ கொண்டு ஒரு மாதிரி அகாசியின் தலையில் பொருத்தினர்.

தற்போது 39 வயதாகும் அகாசி மேலும் இதுகுறித்து எழுதுகையில், “நான் `டோப்பா’ இல்லாமல் விளையாடியிருக்கலாம்தான். ஆனால் நான் ஆரம்பத்திலிருந்தே `டோப்பா’தான் அணிந்திருக்கிறேன் என்று அறிந்தால் பத்திரிகையாளர்கள் என்ன எழுதுவார்கள்? ஆட்டத்துக்கு முந்தைய சிறுபயிற்சியின்போது நான் பிரார்த்தனை செய்வேன். போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, தலைமுடி பறந்துவிடக் கூடாது என்பதற்காக.

ஒவ்வொரு தாவலின்போதும் `டோப்பா’ பறந்து தரையில் விழுவதாகக் கற்பனை செய்வேன். கோடிக்கணக்கான ரசிகர்கள் டிவிக்கு முன்னால் நன்றாக நகர்ந்து, கண்கள் விரியப் பார்த்து, எனது தலைமுடி எப்படி என் தலையிலிருந்து பறந்தது என்பதை ஆச்சரியத்துடன் பேசிக்கொள்வதை நான் மனக்கண்ணில் காண்பேன்.

`டோப்பா’வுடன் விளையாடும் போது…
அகாசியை முதலில் மொட்டைத் தலையுடன் தோன்ற வைத்தவர் அவரது முன்னாள் மனைவியான புரூக் ஷீல்ட்ஸ்தானாம். “நான் எஞ்சியிருக்கும் எனது முடிகளை மொட்டையடித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்தான் கூறினார். அது, நான் எனது பற்களை எல்லாம் உதிர்த்துவிட வேண்டும் என்பதைப் போல இருந்தது. எப்படியோ, அதைப் பற்றி நான் சில நாட்கள் யோசித்தேன். அது எனக்கு ஏற்படுத்திய சங்கடங்கள், அதை நான் மறைத்தது, அதற்காக நான் கூறிய பொய்கள் எல்லாம் என் நினைவுக்கு வந்தன.

ஆனால் நான் ஒரு முடிவுக்கு வந்தபோது, மொட்டைத் தலையுடன் ஒரு `புதியவன்’ என் முன் கண்ணாடியில் தோன்றி என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்” என்று முடிக்கிறார் அகாசி.